கட்டுவிரியன் பாம்பு கடித்தால் தெரியாதா? தூக்கத்திலே போகும் உயிர்? இரவு வேட்டையின் பின்னணி என்ன
சென்னை: ஜூன் 16 பாம்புகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு செய்திகள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, தங்களை தற்காத்துக் கொள்ள மிக அவசியமான சில முக்கிய தகவல்களும் சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் கட்டுவிரியன் பாம்பு பற்றின தகவல்களை சுருக்கமாக இங்கே பார்ப்போம்...!!!
பாம்பு கடி என்றாலே பீதியும், கலக்கமும் மனிதர்களுக்கு ஏற்பட்டுவிடுவது இயல்புதான்.. இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் பாம்பு கடியால் பாதிக்கப்படுகிறார்களாம்..

கட்டுவிரியன் பாம்பு அம்சங்கள்
அதுபோலவே சுமார் 58 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்கு தங்கள் உயிரை இழக்கிறார்களாம்.. அதாவது உலக அளவில் பார்க்கும்போது இந்த மரண எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரமாக உயர்ந்து அச்சத்தை தந்து வருகிறது.. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.
உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்பினங்கள் இருந்தாலும், அதில் சில குறிப்பிட்ட வகைகளுக்கு மட்டுமே மனிதனைக் கொல்லக்கூடிய கொடிய நச்சு இருக்கிறது. நம்முடைய வீட்டை சுற்றி பெரும்பாலும் வலம் வரும் பாம்புகளில் நாகப்பாம்புகள், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் மற்றும் கட்டுவிரியன் ஆகியவைதான் மிகவும் விஷமுள்ளவை.
கட்டு வரியன் - இரவாடி பாம்பு
அதில் "கட்டுவிரியன்" என்று நம்மால் பரவலாக அழைக்கப்படும் பாம்பின் உண்மையான பெயர் "கட்டு வரியன்" என்பதாகும். இந்த பாம்பு கடித்தால் நமக்கு வலியோ, வீக்கமோ, அரிப்போ அல்லது மயக்கம் போன்ற அறிகுறியோ ஏற்படுவதில்லை.
இந்த பாம்புகள் பார்ப்பதற்கு உடல் முழுவதும் கருமை நிறமாகவும் அல்லது நீல நிறம் கலந்த அடர் கருப்பு நிறமாகவும் காணப்படும். இரவில் பார்க்கும்போது இதன் உடல் பளபளவென்று மின்னும். உடல் முழுவதும் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு குறுக்கே வெள்ளை நிறத்தில் கோடுகள் காணப்படும்.
இளம் பாம்புகள் என்றால் இந்த கோடுகள் பளிச்சென்று தெரியும். அதுவே வயதான பாம்புகள் என்றால், கோடுகள் மங்கிய நிலையிலும், புள்ளிகளை இணைத்தது போலவும் காணப்படுமாம். இதன் தலைப்பகுதி மழுங்கி, சின்ன வட்ட வடிவ கருநிறக் கண்களை கொண்டிருக்கும்.
மூச்சை விழுங்கும் பாம்புகள்
வட இந்தியாவின் சில கிராமங்களில் இந்தக் கட்டு வரியன் பாம்புக்கு "மூச்சை விழுங்கும் பாம்பு"என்று பெயர்.. இதற்கு காரணம், அந்த பாம்பு கடிக்கு ஆளானவர்கள், தூக்கத்திலேயே இறந்துவிடுவார்களாம்..
கட்டு வரியன் என்பது ஓர் இரவாடிப் பாம்பு, இரவில் அதிக சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியது. காலை நேரங்களில் வெப்பம் குறைவான பாறை இடுக்குகளிலும், இலைகள், புல்வெளிகள் போன்ற பகுதிகளிலும் தன்னை மறைத்துக் கொள்ளும்.
நள்ளிரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது இவை வீடுகளுக்குள் புகுந்து விடுவதால், மக்கள் எளிதில் கவனிப்பதில்லை. அதுவும் இல்லாமல் நச்சுப் பாம்புகளைப் போல இவை சீண்டப்படும்போது சத்தமிடுவது அல்லது எச்சரிப்பது போன்ற செயல்களைச் செய்யாது என்பதால் இதன் இருப்பு யாருக்கும் தெரிவதே இல்லை. இந்த பாம்பு கடித்தால் வலியே தெரியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
பாம்பு கடி அறிகுறிகள்
நாகப் பாம்புகளின் நச்சுப் பற்கள் சராசரியாக 8 முதல் 10 மில்லிமீட்டர் வரையும், கண்ணாடி விரியனின் நச்சுப்பல் சுமார் ஒன்றரை இன்ச் வரைகூட பெரியதாக இருக்கும் என்பதால் கடித்த இடத்தை எளிதில் கண்டறிய முடியும்.
இதுவே சுருட்டை விரியன் கடித்தால் கூட கொப்புளங்கள் ஏற்படும். ஆனால் கட்டு வரியனின் நச்சுப் பற்கள் வெறும் 4 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவு கொண்டவை. இதனால் கடித்த இடத்தில் பெரிய வலியோ, தடிப்போ, சிவந்து போவதோ அல்லது எந்த தடையோ இருக்காது.
இதன் நஞ்சானது "நியூரோ டாக்ஸின்" (Neurotoxin) என்ற வகையைச் சார்ந்தது. இந்த நஞ்சு மனிதனுடைய நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்குகின்றன. இதனால் கடித்த 1 மணி நேரத்திற்குள்ளாகவே இறப்பு ஏற்படலாம். நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், கண்ணின் இமைகள் மூடியபடி தொங்கிய நிலைக்குத் தள்ளப்படும், அரை மயக்க நிலைக்குச் சென்று சுயநினைவை இழப்பார்கள். வாயைத் திறந்து பேசவும் முடியாமல் போகும். சிறிது நேரம் கழித்து கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.
பாம்புக் கடி சிகிச்சை
கன்னங்களும், உடல் தசைகளும் இறுக்கமாக மாறும். கண்ணின் இமைகளை அசைக்க முடியாமல் போகும். உமிழ்நீரை முழுங்க முடியாமலும், நாக்கை அசைக்க முடியாமலும் வாயில் துர்நாற்றத்துடன் எச்சில் வடியத் தொடங்கும். கடைசியில் ஆக்சிஜனை உடல் முழுக்கக் கொண்டு செல்லும் திறனை நுரையீரல் இழப்பதால், கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது. தூங்கும்போது கடித்து காலை வரை யாரும் கவனிக்காத சூழல் நிலவினால், தூக்கத்திலேயே இறப்பு நேரிடுகிறது.
கட்டு வரியன் கடித்துவிட்டதை கண்டுபிடிப்பதே கடினம் என்பதால், சவாலான பாம்புக்கடி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனால் மேலே கூறிய அறிகுறிகள் தென்பட்டால் சற்றும் யோசிக்காமல் உடனே மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டும்.
இரவு நேரங்களில் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அவசியத் தேவைகளுக்குச் செல்லும்போது டார்ச் லைட் மற்றும் காலணிகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இப்படி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு நாமே வகுத்துக் கொண்டால் மட்டுமே, இதுபோன்ற பாம்பு கடி உயிரிழப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்...!!












Click it and Unblock the Notifications