அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தை.. திருடி காதலிக்கு ஐபோன்.. விசாரணையில் அம்பலம்!
லக்னோ: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்தும் விசாரணையில் தொடர்ந்து திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அவினாஷ் ஷுக்லா, ராமர் கோயில் காணிக்கை பணத்தை எடுத்து தனது காதலிக்கு விலையுயர்ந்த ஐபோன் வாங்கி கொடுத்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்த ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்த பணத்தை ராமர் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். இதற்கிடையே விசாரணையில் அயோத்தி கோயில் திருட்டு தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பல திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அயோத்தி ராமர் கோயில்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அயோத்தி ராமர் கோவிலின் காணிக்கை உண்டியலில் இருந்து திருடப்பட்ட பணத்தை வைத்து குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காதலிக்கு ஆடம்பர பரிசுகள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காணிக்கை எண்ணும் ஊழியர்களில் ஒருவரான அவினாஷ் ஷுக்லா அளித்த வாக்குமூலம் அதிர வைப்பதாகவே இருக்கிறது.
ராமர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் திருடப்பட்ட பணம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்பதை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். அது தொடர்பாகவே அவினாஷ் ஷுக்லா பல முக்கிய தகவல்களை விசாரணையில் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆடம்பர செலவு
சுமார் ரூ.19 லட்சம் வரை அவினாஷ் தனது குடும்பத்தினர், நண்பர்களுக்குச் செலவழித்துள்ளார். இதுபோல தனது சொந்த செலவுகளுக்காக அயோத்தி காணிக்கை பணத்தைப் பயன்படுத்தியதை அவினாஷ் ஷுக்லா ஒப்புக்கொண்டிருக்கிறார். தனது சகோதரரின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த சுமார் ரூ.6 லட்சம் செலவிட்டதாகவும், மற்றொரு சகோதரருக்கு ரூ.5 முதல் 6 லட்சம் வரை வழங்கியதாகவும் கூறியிருக்கிறார்.
காதலிக்கு ஐபோன்
அதுமட்டுமின்றி, தனது காதலிக்கு விலையுயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஒன்றைப் பரிசாக வாங்கிக் கொடுத்ததுடன், அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ.2.5 லட்சம் பணத்தையும் அனுப்பியதாக விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த அயோத்தி காணிக்கை திருட்டில் 8 பேருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதில் காணிக்கை பணத்தில் இருந்து அதிகபட்சமாக சுமார் ரூ.20 லட்சம் எடுத்துச் சென்றவர் அவினாஷ் ஷுக்லா தான் என்பது ஏற்கனவே தெரிய வந்துவிட்டது. இதன் காரணமாகவே அவர் மீதான விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
காணிக்கை பணம் எப்படி திருடப்பட்டது, யாருக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது, அந்த பணம் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக வங்கிக் கணக்குகள், பண பரிமாற்றங்கள், சொத்துகள் மற்றும் நிதி ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பணம் எங்கெல்லாம் போய் இருக்கிறது என்பதை கண்டறிந்து, உறுதியான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நடக்கும் சட்டசபை தேர்தலில் இந்த அயோத்தி ராமர் கோயில் காணிக்கை விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்றே தெரிகிறது.














Click it and Unblock the Notifications