ரூ.4000க்கும் அதிகமாக மின் கட்டணம் வருதா? அப்போ இனி இப்படித்தான் பில் கட்டணும்! புதிய நிபந்தனை
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் மின் கட்டண வசூல் நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.4000க்கும் அதிகமாக கட்டணம் வரும்பட்சத்தில், அதை செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மின்சாரம் பயன்பாட்டில் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தொழிற்துறை வளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த வருடம் கூடுதலான தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. 2021-2024 வரை 27 புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இயல்பாக மின்சார தேவை அதிகரிக்கிறது.

மறுபுறம் கோடை காலங்கள் முன்பை விட அதிக வெப்பம் கொண்டதாக இருக்கின்றன. எனவே பொதுமக்களின் மின் நுகர்வும் அதிகரித்திருக்கிறது. தேவைக்கு ஏற்ப மின்சாரமும் பெரிய அளவில் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் மின் கட்டணம் கணக்கிடும் முறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதிமுக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளரும், வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களும், 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தைப் பெற்று வந்தனர்.
தற்போது, வீட்டின் உரிமையாளர் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வீட்டில் இரண்டு மின் இணைப்பு இருந்து, மின் வாரிய ஊழியர்கள் கணக்கெடுப்புக்கு வரும்பொழுது, வீட்டு உரிமையாளர் ஒரு பகுதியிலும், வாடகைக்கு இருப்பவர் மற்றொரு பகுதியிலும் குடியிருந்தால், இரண்டு மின் இணைப்புகளுக்கும் தற்போதுள்ள 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
ஆனால், வாடகைக்கு இருப்பவர் அந்த வீட்டை காலி செய்துவிட்டால் உடனடியாக வீட்டு உரிமையாளரின் பெயரில் உள்ள இரண்டு மின் இணைப்புகளில் ஒரு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஒரு மின் இணைப்பு மட்டுமே வழங்கப்படும். மீண்டும் அந்த வீட்டில் வாடகைக்கு வேறொருவர் வந்தால், அந்த உரிமையாளர், வாடகைதாரர் வந்துள்ளதாகக் குறிப்பிட்டு, மீண்டும் புது மின் இணைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது மின் கட்டணம் செலுத்தும் முறையிலும் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது என்றும், ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும் என்றும் வாரியம் அறிவித்திருக்கிறது. அதேபோல ரூ.1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும் எனவும் அறிவித்திருக்கிறது.
ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் நடைமுறையானது, பயனாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications