ஷாக்கடிக்கும் இபி.. புதிய மின்கட்டண உயர்வு கட்டணத்தை வாபஸ் பெறுமா மத்திய அரசு? எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: உச்சபட்ச நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான 20% மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழகம் முழுவதும் வலுக்க துவங்கிவிட்டன.
நாடு முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த நேரத்தில் பயன்படுத்தினாலும் ஒரே விதமான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில்தான் மாற்றம் வருகிறது.

அதன்படி மின்சாரத்தை மிக அதிக அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு அதிக கட்டணமும், குறைவான அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு இயல்பை விட குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில், தற்போது நடைமுறையில் இருந்து வரும் மின்கட்டண பட்டியலில் 2 மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மின்சாரம்: அந்தவகையில், அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிற 'பீக் அவர்' என்று அழைக்கப்படுகிற உச்சநேரத்தில் (அதாவது காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) மின்கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும். * 'சோலார் அவர்' என்று அழைக்கப்படுகிற நேரத்துக்கு,இயல்பான கட்டணத்தைவிட 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளை தெரிவித்துள்ளது.
இதற்கு, பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.. உச்சபட்ச நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான 20 சதவீதம் மின்கட்டண உயர்வை மத்தியஅரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பாக அக்கட்சிகளின் மாநில தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: தமிழகத்தில் காலை, மாலை வேளைகளில் 6 முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின் பயன்பாடு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மின் தேவை அதிகம் உள்ள இத்தகைய நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க வேண்டும் என மத்திய மின்துறை அமைச்சகம் திடீரென அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டண உயர்வு ஏழை, நடுத்தர மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும். பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட கடும் தாக்குதலாகவே இதை கருதவேண்டும். மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்த மின் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் இரா.முத்தரசன்: உச்சபட்ச மின்சார பயன்பாட்டு நேரத்தில், மின் நுகர்வோர் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, வழக்கமாக உள்ள கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதல் கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளது. அதன்படி, காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இது கொள்ளையைவிட கொடியது. இது வாக்களித்த மக்களுக்கு இழைக்கபடும் அநீதியாகும். மக்களுக்கு விரோதமான இந்த மின் கட்டண உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம். இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன்: நாடு முழுவதும் மின்சாரம்அதிகமாக பயன்படும் உச்சபட்ச நேரங்களில் மின்கட்டணம் 20 சதவிதம் உயர்த்தப்படும் என மத்தியஅரசு அறிவித்திருக்கிறது. இதற்காக மின்சார விதிகளில் திருத்தம்கொண்டு வந்துள்ளது. அதன்படி, 2024 ஏப்ரல் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025 ஏப்ரல் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
உச்சபட்ச நேரத்துக்கு ஒரு வகையான மின்சார கட்டணம், சாதாரண நேரத்துக்கு ஒரு வகையானமின்சார கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, மத்திய அரசுஅறிவித்துள்ள 20 சதவீத கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மின்சார விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தையும் கைவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஸ்மார்ட் மீட்டர்: முன்னதாக, தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டு நுகர்வோர்களுக்கு பாதிப்பு இல்லை என்று மின் பகிர்மான கழகம் தெரிவித்திருந்தது.. "இப்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி, உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே இந்த திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு அபராதம் வசூல் செய்வது தொடர்பான விவகாரத்தில், தற்போது அபராதம் ஏதும் நிர்ணயம் செய்யப்படாததால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்" என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக மின்சார வாரியம் இவ்வாறு விளக்கம் அளித்திருந்தபோதிலும்கூட, "கொள்ளையைவிட கொடியது" இந்த மின்கட்டண உயர்வு என்ற விமர்சனங்கள் மத்திய அரசை நோக்கி பாய்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications