அசத்தும் மின்சாரத்துறை! முதல்முறையாக 18 ஆயிரம் மெகா வாட்டை கடந்த மின் நுகர்வு.. ஆனாலும் நோ பவர் கட்!
முதன்முறையாக 18,000 மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு உச்சம் தொட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் முதன்முறையாக நேற்று 18,053 மெகா வாட் மின் நுகர்வு செய்யப்பட்டதாகவும், இந்த தேவை எந்த மின்தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக இந்த மாதத்தில் தமிழ்நாட்டில் மின் நுகர்வு இருந்து வருகிறது.

திமுக அரசு தீவிரம்
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் மின் வெட்டு அதிகமாக இருந்ததை எதிர்க்கட்சியான அதிமுக மிகக் கடுமையாக விமர்சித்தது. அதன் விளைவாக 2011ல் திமுக ஆட்சியைப் பறிகொடுக்க நேர்ந்தது. இந்நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்ச மின் பயன்பாடு இருந்து வரும் சூழலிலும், முடிந்தவரை மின்வெட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது.

மின் நுகர்வு
தமிழ்நாட்டின் மின் தேவை 16,500 மெகாவாட் முதல் 17,500 மெகாவாட் ஆக உள்ளது. இது கோடை காலத்தில் இன்னும் அதிகரித்து 18,100 மெகாவாட் வரை அதிகரிக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பகல் நேரத்தில் 17,196 மெகா வாட்டாக இருந்த மின் பயன்பாடு தற்போதைய மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டி வருகிறது. இந்த மின் தேவை அளவு வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய உச்சம்
இந்த மாதத்தில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாகி வருவதன் காரணமாக வீடுகளில், ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கடந்த மார்ச் 10ஆம் தேதி அதிகபட்சமாக 17,647 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. மார்ச் 14ஆம் தேதி மின் நுகர்வு 17,705 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியது. அதைத்தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி மின் நுகர்வு 17,749 மெகாவாட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில் ஏற்று, முதல் முறையாக 18 ஆயிரம் மெகா வாட்டை கடந்துள்ளது.

18 ஆயிரம் மெகா வாட்
தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 16) மின்சார பயன்பாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று 16/03/2023 தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053 மெகாவாட். முதன்முறையாக 18,000 மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு உச்சம் தொட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 15/03/2023ல் 17,749 மெகாவாட்" எனத் தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் மட்டும்
இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மின் நுகர்வு 18 ஆயிரம் மெகா வாட்டை கடந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சில இடங்களில் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டது. மார்ச் - ஏப்ரல் மாததில் 18 ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், இப்போதே 18 ஆயிரம் மெகா வாட்டை கடந்து மின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கூடுதல் மின் பயன்பாட்டை ஈடு செய்ய மின்சாரத்துறை பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications