இனி தினம் ரூ.576 கோடி செலவு செய்தால் கூட.. எலான் மஸ்க்கால் சொத்தை தீர்க்கவே முடியாது! சுவாரசிய கதை
சென்னை: உலகின் மிகப் பெரிய பணக்காரராகத் திகழும் எலான் மஸ்க், சமீபத்தில் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெற்றிக்குப் பின் உலகின் முதல் டிரில்லியன் டாலர் அதிபராக உருவெடுத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு தற்போது 1.1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயில் இது சுமார் 105.16 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு மலைக்க வைக்கும் தொகையாகும்.
ஆனால், உலகளாவிய புதிய சொத்து வரி விதிகள் அமலுக்கு வந்து, மஸ்க் தனது மொத்த சொத்தையும் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் முழுமையாகச் செலவழித்து முடிக்க வேண்டும் என்ற கற்பனையான விதி விதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? இந்த விசித்திரமான சூழ்நிலையில் அவர் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ஒரு சுவாரஸ்யமான கற்பனைக் கதை இங்கே.

50 ஆண்டுகளில் தினசரி செலவு எவ்வளவு?
18,250 நாட்கள் கொண்ட 50 ஆண்டுகளில், எந்த லாபகரமான முதலீடும் இன்றி வெறும் செலவு மூலம் மொத்த சொத்தை அழிக்க வேண்டும் என்றால், மஸ்க் தினமும் ரூ.576 கோடியைச் செலவழிக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2,10,320 கோடி, மணிக்கு ரூ.24 கோடி, நிமிடத்துக்கு ரூ.40 லட்சம் என்று கணக்கு வருகிறது. காலையில் எழுந்ததும் அன்றைய 576 கோடியை நள்ளிரவுக்குள் பூஜ்ஜியமாக்க வேண்டும். இது கேட்க எளிதாகத் தோன்றினாலும், நடைமுறையில் மிகப்பெரிய சவாலாக மாறும்.
முதல் 10 ஆண்டுகள்: உலகம் முழுக்க இலவச திருவிழா
ஆரம்பத்தில் மஸ்க் ஆடம்பர வீடுகள், ஜெட் விமானங்கள், வைரங்கள், யாட்கள் என வாங்கினார். ஆனால் அவை ஒரு நாளைக்கான செலவை நிரப்பவில்லை. எனவே உத்தியை மாற்றினார். சென்னை, மும்பை, நியூயார்க், டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மெட்ரோ, பேருந்து போக்குவரத்தை முழுவதுமாக விலைக்கு வாங்கி, பொதுமக்களுக்கு இலவசப் பயணம் அளித்தார்.
மதியத்துக்குள் பல நாடுகளின் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளின் அனைத்து பொருட்களையும் வாங்கி ஏழை மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார். இரவு 11:59க்கு சரியாக 576 கோடி செலவாகி முடிந்தது. உலக மக்கள் அவரை 'நடமாடும் தெய்வம்' எனப் போற்றினர். ஆனால் மஸ்க்குக்கு இது தினசரி கடமையாக மாறியது.
25-வது ஆண்டு: செலவழிப்பில் ஏற்பட்ட சோர்வு
25 ஆண்டுகள் கழித்து மஸ்க்கின் தோற்றம் மாறியது. தலைமுடி நரைத்து, முகம் சுருங்கியது. தினசரி 576 கோடி செலவு அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஒரு வாரம் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வெடுத்தால், அடுத்த வாரம் கணக்கில் 4,000 கோடிக்கு மேல் தேங்கும்.
இந்த அழுத்தத்தை குறைக்க அவர் 'சாத்தியமில்லாத' திட்டங்களுக்கு பணம் கொட்டினார். பசிபிக் பெருங்கடலில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பிரம்மாண்ட திட்டத்துக்கு தினசரி காசோலைகள் எழுதினார். பாலைவனங்களை பசுமை மாற்றும் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 30 ஆண்டு ஊதியத்தை முன்பணமாக வழங்கினார். லாபம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
50-வது ஆண்டு: இறுதி நாளும் திருப்பமும்
50 ஆண்டுகளின் கடைசி நாள். வயதான மஸ்க் தனது அறையில் அமர்ந்து டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். பல்லாயிரம் இலவச பல்கலைக்கழகங்கள், சூழலியல் நகரங்கள், உலகின் பல பகுதிகளில் அவர் உருவாக்கிய மாற்றங்கள் அவரது பங்களிப்பை நினைவூட்டின.
நள்ளிரவு 12 மணிக்கு கணக்கு பூஜ்ஜியத்தைக் காட்டியது. மஸ்க் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால் அடுத்த நொடி அவரது போன் ஒலித்தது. அவர் மறந்துபோன Grok AI மென்பொருள் உலக வர்த்தகத்தில் சிறு மாற்றம் செய்து பில்லியன் கணக்கான லாபத்தை ஈட்டியிருந்தது. கணக்கில் புதிதாக 50,000 கோடி வரவு பதிவானது.
தலையில் கை வைத்த மஸ்க் தன் உதவியாளரிடம், "நாளைக்கு யாருக்கு அதிவேக ரயில் பாதை இலவசமாக வேண்டும் எனப் பாருங்கள்!" என்று புலம்பினார். பணக்கார பட்டத்தைத் துறப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அவர் உணர்ந்தார்.












Click it and Unblock the Notifications