"ஒரு ஆளு கூட ஏறல!" இன்ஸ்டாகிராமில் கதறும் தனியார் பஸ் டிரைவர்கள்.. 'வெற்றி பயணம்' திட்டத்தால் கொடுமை
சென்னை: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்களைத் திறந்தாலே கடந்த 2 நாட்களாக ஒரே மாதிரியான வீடியோக்கள் தான் வைரலாகி வருகின்றன. "நேரத்துக்கு வண்டி எடுக்கிறோம், டீசல் போடுறோம், ஆனா பஸ்ஸுக்குள்ள ஒரு பயணியும் இல்லை... இன்னைக்கு பேட்டா கூட கிடைக்காது போலிருக்கு" என்று தனியார் பேருந்து நடத்துநர்களும் ஓட்டுநர்களும் கண்ணீருடன் பேசும் வீடியோக்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 அன்று தமிழகத்தில் 'வெற்றி பயணம்' என்ற பெயரில் மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட இலவச பேருந்து திட்டம் அமலுக்கு வந்தது. அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற நிலை உருவான அடுத்த கணமே, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. சில வழித்தடங்களில் ஒன்று அல்லது இரண்டு பயணிகள் கூட ஏறாமல் வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன தனியார் பேருந்துகள்.

விடியல் பயணம் vs வெற்றி பயணம்: என்ன வித்தியாசம்?*
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'மகளிர் விடியல் பயணம்' திட்டம், நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண (வெள்ளை போர்டு) பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் இருந்தது. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் அல்லது புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் நீண்ட தூரப் பேருந்துகளில் அந்த சலுகை அப்போது வழங்கப்படவில்லை. இதனால் தனியார் பேருந்துகளின் தினசரி வருமானத்தில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படவில்லை. நகரத்திற்கு வெளியே செல்லும் கிராமப்புற மக்கள் தனியார் பேருந்துகளையே அதிகம் நம்பியிருந்தனர்.
ஆனால், தற்போது தமிழக வெற்றிக் கழகம் கொண்டுவந்துள்ள 'வெற்றி பயணம்' திட்டத்தில் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், லிமிடெட் ஸ்டாப் (LSS) மற்றும் புறநகர் சாதாரண பேருந்துகள் என 12,000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளுக்கு இலவச பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறம் முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம் அமலுக்கு வந்ததால், சாதாரண ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்கள் முழுமையாக அரசு பேருந்துகளை நோக்கித் திரும்பியுள்ளனர்.
முன்னேற்பாடுகள் மற்றும் கள யதார்த்தங்களை விரிவாக யோசிக்காமல், அரசியல் அவசரத்தில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டதாகப் போக்குவரத்துத் துறை வட்டாரங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
டீசலுக்கு கூட காசு தேறல: கலங்கும் ஊழியர்கள்
தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனியார் பேருந்து தொழிலை நம்பி வாழ்கின்றன. நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து, அதில் டீசல் செலவு மற்றும் உரிமையாளரின் பங்கை வழங்கிவிட்டு, மீதமுள்ள தொகையை பேட்டாவாக எடுக்கும் முறையே பல மாவட்டங்களில் வழக்கத்தில் உள்ளது.
தற்போது அரசு பஸ்களில் அனைத்து வழிகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க முடிவதால், பேருந்து நிறுத்தங்களில் தனியார் பேருந்துகள் வந்தாலும் பயணிகள் ஏறுவதில்லை. இதனால் நாளொன்றுக்கு வழக்கமாக வரும் வசூலில் 50 சதவீதத்திற்கும் மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் நாள் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ800 வரை கிடைத்த தினசரி பேட்டா, இப்போது ரூ200 அல்லது ரூ300-ஆக குறைந்துவிட்டதாக ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
"காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு வண்டியை கிளப்புறோம். ரூட் முழுக்க ஆளே இல்லாம ஓட்டிட்டு போனா, நைட்டு வீட்டுக்கு என்ன காசு எடுத்துட்டு போறது? அரிசி வாங்க கூட காசு இல்லாத நிலைமை வந்துடும் போல இருக்கு" என இன்ஸ்டாவில் ஓட்டுநர் ஒருவர் பதிவிட்ட வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.
உரிமையாளர்கள் நிலைமை என்ன?
ஓட்டுநர், நடத்துநர் மட்டுமல்லாமல் பேருந்து உரிமையாளர்களும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஒரு தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என்றால்:
இன்சூரன்ஸ் (காப்பீட்டு கட்டணம்)
காலாண்டு சாலை வரி
எஃப்.சி (தகுதிச் சான்றிதழ்) செலவுகள்
தினமும் எகிறும் டீசல் விலை
டயர் மற்றும் உதிரிபாகங்கள் பராமரிப்பு
இவ்வளவு செலவுகளையும் சமாளிக்க குறைந்தபட்ச வசூல் நிச்சயம் தேவை. பெண்கள் மட்டுமின்றி, அவர்களோடு வரும் குடும்பத்தினரும் அரசு பேருந்துகளையே தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர். தொடர் நஷ்டம் ஏற்பட்டால் பேருந்துகளை ஷெட்டிலேயே நிறுத்திவிட்டு தொழிலை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என சிறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கைவிரிக்கின்றனர். நீதிமன்றப் படிகளை ஏறி தங்களுக்கு நிவாரணம் கோரும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்துள்ளது.
எளிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கு பேருந்து பயண சலுகை மிக முக்கியமான ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பெண்கள் தங்கள் வீட்டு பட்ஜெட்டில் மிச்சமாகும் பணத்தைக் குழந்தைகளின் கல்விக்கும் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், ஒரு தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டம், அதே துறையில் பல தலைமுறைகளாக உழைத்து வரும் தனியார் பேருந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பறித்துவிடக் கூடாது என்பதே பலரின் ஆதங்கமாக உள்ளது.
அரசு இதை யோசித்து, தனியார் பேருந்து ஊழியர்களுக்கான டீசல் மானியம் வழங்குவதோ அல்லது தனியார் பேருந்துகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மாற்று வழிகளை உருவாக்குவதோ மட்டுமே இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வைத் தரும். அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் நெருங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications
