சென்னையில் நீடிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. யாருக்கு குறி? சிக்கப்போவது யார்?
சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சென்னையில் உள்ள நகரின் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் நுங்கம்பாக்கம், கே.கே.நகர், வேப்பேரி போன்ற பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலருக்கும் சம்மன் அனுப்பி விளக்கம் பெற்று வருகின்றனர்.
இதனிடையே நேற்றும் இன்றும் சென்னை, புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நுங்கம்பாக்கம், கே.கே.நகர், வேப்பேரி போன்ற பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர். நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கே.கே.நகர் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வீடு போன்ற இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 - 2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை தியாகராயர் நகர், மேற்கு மாம்பலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராயர் நகரில் லேண்ட் மார்க் ஹவுசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் உதயகுமார் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் யாருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது? யாரை சிக்க வைக்கப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications