சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.. அதிகாலையில் அதிர வைத்ததன் பின்னணி என்ன?
சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சென்னையில் உள்ள நகரின் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் துணை ராணுவப்படையினர் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலருக்கும் சம்மன் அனுப்பி விளக்கம் பெற்று வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.கொளத்தூர் சிவ பார்வதி நகரில் அமைந்துள்ள முத்து என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்றது. பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள பிரியா என்பவர் வீட்டிலும், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் கணேஷ் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனிடையே இன்றைய தினம் காலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவப்படையினர் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று சென்னையில் நுங்கம்பாக்கம், கே.கே.நகர், வேப்பேரி போன்ற பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர். நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கே.கே.நகர் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வீடு போன்ற இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 - 2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications