தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் - எடப்பாடி வாக்குறுதி!
சென்னை: அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் ஆகியவை மீண்டும் தொடங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருத்தணியில் மக்கள் மத்தியில் பேசும்போது வாக்குறுதி அளித்துள்ளார். திமுக ஆட்சியில் மின்சார கட்டணம், வீட்டு வரி அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணி ஆற்றி வருகின்றன. சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இதுவரை பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பிரச்சாரம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "செவ்வாய் தோறும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கட்டணமில்லா தரிசனத்துக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும். அதிமுக ஆட்சியில் உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணமில்லா தரிசனத்தை திமுக அரசு நிறுத்தியது. திருத்தணியில் மீண்டும் கட்டணமில்லா தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 210 இடங்களில் வெல்லும். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் ஆகியவை மீண்டும் தொடங்கப்படும்" என திருத்தணியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வளமாக இருந்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டும் தான் வளமாக இருக்கிறது. மன்னர் பரம்பரையாக தங்களை நினைத்துக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் ஆட்சியை ஜனநாயகப் பூர்வாக வேரறுத்து,
அதிமுக ஆட்சியில் மக்களாட்சியைத் தமிழக மக்கள் நிறுவப் போகும் தேர்தல் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications