ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் தவெகவை கொண்டு வர முயற்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அக்கட்சிக்கு 40 இடங்கள் வரை தருவதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகவும் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தவெகவை அதிமுக கூட்டணியில் கொண்டு வர டெல்லியில் தீவிர பேச்சுவார்த்தை நடக்கிறது. தவெக 60 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 40 தொகுதிகள் வரை தவெகவுக்கு ஒதுக்க தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. பொதுவாக அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் ஆகலாம். கூட்டணியில் இருப்பவர்கள் பிரியலாம். பிரிந்து கிடந்தவர்கள் ஒன்று சேரலாம். இதுவரை நடந்த 16 சட்டசபை தேர்தல்களில் வரலாற்றில் இல்லாத வகையில் திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.
அத்துடன் 100-க்கும் மேற்பட்ட இயக்கங்களும் சங்கங்களும் திமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளன. இவ்வாறு திமுகவின் பலம் கூடியுள்ள நிலையில், அக்கட்சியை வீழ்த்த எதிராளியான அதிமுக பலம் பொருந்தியதாக இருத்தல் அவசியமான ஒன்றாகும்.
அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளே கூட்டணியில் உள்ளன. இது திமுக கூட்டணியை எதிர்க்க போதாது என அதிமுக தலைமை கருதுகிறது.
நடிகர் விஜய்யின் தவெகவுக்கு இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்களின் ஆதரவு இருப்பதால் அக்கட்சி அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்தால் பெரும் வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை கருத்தில் கொண்டு திமுக புதிய வியூகங்களை வகுத்து வருகின்றன. என்னதான் விஜய்யால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என திமுக கூறினாலும், ஓட்டுக்களை பிரித்துவிடுவாரோ என்ற அச்சம் திமுகவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உதவித் தொகை, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்டவைகளால் மக்களிடம் திமுகவுக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில் நாளை திருச்சி பொதுக் கூட்டத்திலும் மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் அதிமுகவினர் கூட்டணியை பலப்படுத்த ஆலோசனை நடத்தியதில், விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டதாம். இந்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
காங்கிரஸ் கட்சி தவெகவில் இணையும் என காத்திருந்த நிலையில் தவெகவை அதிமுக கூட்டணியில் கொண்டு வரலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அந்த வகையில் தவெகவுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications