தலை தப்பியது.. பொதுக்குழு தீர்ப்பில் “ஒரு பாய்ண்டு” - ஒருபக்கம் எதிராகவே இருந்தாலும் எடப்பாடி ஆறுதல்
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதில் இடம்பெற்றிருந்த ஒரு உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆபத்து ஏற்படாது என்று கூறப்படுகிறது.
Recommended Video
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.

உத்தரவு
ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

பழைய நிலை
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இணை ஒருங்கிணைப்பாளர்
இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கின்றனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பிரமான பத்திரம் தற்போது அவருக்கு எதிராக திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டன.

பிரமான பத்திரம்
ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பிரமாண பத்திரத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளதால், தான் வகிக்கும் இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் பதவிகளை அதிமுக பதிவு ஆவணங்களில் அகற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டாராம்.

பதவிக்கு ஆபத்தா?
இந்த பிரமான பத்திரம் பதவியை ராஜினாமா செய்வதற்கு ஒப்பானது என்றும் இதனை தேர்தல் ஆணையம் ஏற்றால் எடப்பாடி பழனிசாமி கட்சியின் உறுப்பினராக மட்டுமே தொடர முடியும். இதனால் அதிர்ச்சியில் இருக்கும் ஈபிஎஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் சொல்லி அதை திரும்பப்பெற முயற்சித்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்பு இருக்கும் நிலையே தொடரும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பிரமான பத்திரமும் செல்லாது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications