இன்றுடன் முடியும் செங்கோட்டையனின் கெடு.. டெல்லிக்குப் பறக்கும் எடப்பாடி! அதிமுகவில் அடுத்தது என்ன?
சென்னை: அதிமுகவில் செங்கோட்டையன் மூலம் மீண்டும் ஒரு கலகம் வெடித்திருக்கும் நிலையில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க அவர் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க செல்வதாக கூறினாலும், உண்மையில் அமித்ஷாவை சந்திக்கவே எடப்பாடி டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. அடுத்தடுத்து பிளவுகளை சந்தித்து வந்த அதிமுகவில் அடுத்து ஒரு விக்கெட் விழுந்திருக்கிறது. ஏற்கனவே கட்சியின் முக்கிய முகங்களாக இருந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர்.
இந்த நிலையில் தற்போது அடுத்த பிளவாக செங்கோட்டையன் கட்சியை விட்டு செல்ல இருக்கிறார். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் தொடர் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதிமுக பிரிவு
உண்மையில் செங்கோட்டையன் தான் ஜெயலலிதா, ஓபிஎஸ்-க்குப் பிறகு முதலமைச்சராக வேண்டியது. ஓபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சசிகலாவை முதல்வராக முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் சிறை செல்ல நேர்ந்ததால், செங்கோட்டையனை முதல்வராக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டார் எடப்பாடி.
செங்கோட்டையன்
அதே நேரத்தில் நாட்கள் செல்ல செல்ல சீனியர்களை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எடப்பாடி மீது வைக்கப்பட்டது. அதில் மிக முக்கியமானவர் செங்கோட்டையன். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த அவர் ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என காத்துக்கொண்டிருந்தார். அதற்கேற்றாற்போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்ற நிலையில் அதில் தனது பெயரை கீழே போட்டதோடு, எம்ஜிஆர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லாததை காரணம் காட்டி எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார் செங்கோட்டையன். அப்போதே அவர் கட்சியில் இருந்து விலகலாம் என சொல்லப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கூறி அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய செங்கோட்டையன் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் எனக் கெடு விதித்திருந்தார். அந்தக் கெடு செப்டம்பர் 15ஆம் தேதியான இன்றுடன் முடிவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
எடப்பாடி டெல்லி பயணம்
அதே நேரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. தனக்கு எதிராகச் செயல்படும் ஒரு அணியின் தலைவரை அமித்ஷா சந்தித்துப் பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமித்ஷா
அதில் அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது, பாமக, தேமுதிக, மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து எடப்பாடி வாழ்த்து தெரிவிக்கிறார் என அதிமுக கூறியிருக்கிறது. உண்மையில் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்திப்பதை விட அமித்ஷாவைச் சந்திப்பதுதான் எடப்பாடி பழனிசாமி விசிட்டின் முக்கிய நோக்கம் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications