விஜயகாந்த் எப்படிப்பட்ட மனுஷன்.. ரொம்ப வேதனையா இருக்கு! எடப்பாடி, திருமாவளவன், ராமதாஸ் இரங்கல்
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளார்கள்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள இரங்கல் குறிப்பில், "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த், குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் திரு.விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு இருக்கும் இரங்கல் குறிப்பில், "தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. கேப்டன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், "உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழ்த் திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த். அரசியலைக் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு; அவருக்கும் என் மீது மரியாதை உண்டு.
மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர். திரைத் தொழிலாளர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவர் மீதும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவு அவரது இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளதாவது, "தேசிய முற்போக்கு திராவிடக் கழக கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திரைப்பட நடிகருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.
அவர் என்னுடன் நெருங்கி பழகிய நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தேமுதிக தலைவரும், முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள், உடல்நலக் குறைவால் மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரைப்பயணமும், அரசியல் பயணமும் தனித்துவம் மிக்கவை. நடிப்பிலும் முத்திரை பதித்து, நடிகர் சங்கத்திலும் ஆளுமையுடன் செயலாற்றிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள், அரசியலிலும் கால்பதித்து, அரசியல் பயணத்திலும் தனக்கென தனிபாணியை உருவாக்கி மக்கள் மனங்களை வென்றார். மிகக் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
எளிய மக்களுக்கு அன்பின் உருவமாக, கருணையின் வடிவமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணம் தேமுதிகவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணத்தால் பெருந்துயரில் வாடும் தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications