பிள்ளையார் சுழியை அழிக்காமல் வைத்திருக்கும் எடப்பாடி.. விஜய் பற்றி வாயே திறக்கலையே.. பின்னணி என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் குறித்து எந்த தலைவரும் ஒரு வார்த்தை கூட பேசாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி இன்னும் விஜய் அதிமுகவுடன் கூட்டணி பக்கம் வருவார் என்று நம்பிக் கொண்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக மற்றும் துரோகிகளை முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியும் கடுமையாக விமர்சித்தனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தங்களை அறிவித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் இதர அதிமுகவினர் யாரும் விஜய் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இத்தனைக்கும் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான கொங்கு மண்டலத்தில் தவெகவுக்காக பணியாற்றி வருகிறார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுகவின் வாக்குகளை குறி வைத்தே விஜய் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கேற்ப தவெக நிர்வாகிகள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்த தொடங்கி இருக்கின்றனர்.
அதேபோல் அதிமுக தரப்பில் தவெகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரச்சாரத்தில் தவெக கொடியை பார்த்து, "கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க.." என்று பேசினார். ஆனால் அதிமுக - தவெக இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்று அடுத்த சில நாட்களிலேயே விளக்கம் அளித்தார்.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தவெகவுடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தவெகவில் செங்கோட்டையன் இணைந்த போதும் கூட, விஜய் மற்றும் தவெகவை பற்றி ஒரு வார்த்தையை கூட பேசவில்லை. விஜய்யின் ஆதரவு வாக்குகள் அதிமுகவை பதம் பார்க்கிறது என்பதை அறிந்தும் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தவெக கூட்டணிக்காக போடப்பட்ட பிள்ளையார் சுழியை எடப்பாடி பழனிசாமி அழிக்கவில்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். விஜய் பக்கம் எந்தக் கட்சியையும் செல்லவிடாமல் தடுத்தால், அவர் தனியாக நிற்க வேண்டிய சூழல் உருவாகும். இறுதியாக திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணிக்குள் வருவார் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தவெக பொதுக்குழு கூட்டத்திலும் விஜய் எடப்பாடி பழனிசாமியையோ, அதிமுகவையோ சீண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications