என்டிஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்.. சீனுக்குள் வந்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: என்டிஏ கூட்டணியில் இன்று இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், என்டிஏ கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். துரோகத்திற்கான நோபல் பரிசை கொடுத்தால், அதனை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் சில வாரங்களுக்கு முன் விமர்சித்திருந்தார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கு பின் தமிழக அரசியலில் அத்தனை காட்சிகளும் மாறி வருகிறது. அப்போதே அமமுகவை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். அதற்கேற்ப டிடிவி தினகரன் சில வாரங்களாக விமர்சிப்பதையும் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டிடிவி தினகரன் சந்தித்தார். அதேபோல் அதிமுகவுடன் இருப்பது பங்காளி சண்டை மட்டும்தான் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்றும் கூறி இருந்தார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தாதது பேசுபொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனை வரவேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி என்டிஏ கூட்டணியின் தலைமை என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications