மூச்சுத்திணறல் பாதிப்பால் மருத்துவமனையில் அட்மிட்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை எப்படி உள்ளது?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

75-வயதான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார்.
இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவேராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று, 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். அதன் பிறகு தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிய இன்று முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications