ஈரோடு டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. ஸ்பாட்டிற்கே வந்த தவெக எம்எல்ஏ.. அதிரடி ஆக்ஷன்
ஈரோடு: ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் இரவு 9 மணி அளவில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டிலுக்கு கூடுதல் பணம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாளருக்கு வலியுறுத்தினார்.
ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மூலப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில், மதுப் பிரியர்களிடம் பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையாளர்கள் வசூலிப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகனுக்கு இரவு 9:00 மணி அளவில் தொலைபேசி வாயிலாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

புகார் கிடைத்த அடுத்த அரை மணி நேரத்திற்குள் (இரவு 9:30 மணி அளவில்) சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். மூலப்பாளையம் மட்டுமின்றி, அதனை ஒட்டியுள்ள எலவமலை மூலப்பாளையம் மற்றும் சித்தோடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கும் அவர் திடீர் விசிட் அடித்தார்.
சட்டமன்ற உறுப்பினரைக் கண்டதும் அங்கு மது வாங்கக் குவிந்திருந்த மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரிடம் திரண்டு வந்து தங்களது புகார்களை அடுக்கினார்கள். "இங்குள்ள கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கட்டாயமாக 20 ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள். கேட்கும் நபர்களுக்கு மதுபானம் தருவதில்லை" என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, கடைகளுக்குள் சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன், அங்கிருந்த விற்பனையாளர்களிடம் கூடுதல் விலை வசூலிப்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு விற்பனையாளர்கள், "நாங்கள் அரசு நிர்ணயித்த விலையைத் தான் வாங்குகிறோம்" என்று கூறி, முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்தனர். இதனால் விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
அந்தச் சமயத்தில், அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திரண்டிருந்த பொதுமக்களை அமைதிப்படுத்திய போலீசார், "சட்டமன்ற உறுப்பினர் இதுகுறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பார், எனவே யாரும் இங்கு சலசலப்பை ஏற்படுத்த வேண்டாம்" என்று கூறி கூட்டத்தைக் கலைத்தனர்.
அதன்பின்னர், டாஸ்மாக் ஊழியர்களிடம் கடுமையான தொனியில் எச்சரித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் கூறுகையில், "அரசு நிர்ணயித்த விலையைத் தவிர ஒரு ரூபாய் கூட பொதுமக்களிடம் கூடுதலாக வாங்கக் கூடாது. ஏழை, எளிய மக்களிடம் இவ்வாறு முறைகேடாகப் பணம் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அறிவுரை வழங்கி எச்சரித்தார்.
மேலும், இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக உடனடியாக ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சட்டமன்ற உறுப்பினர், கூடுதல் விலை வசூலிக்கும் ஊழியர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பொதுவாகப் புகார்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தாமதமாகும் என்ற நிலையை மாற்றி, தகவல் கிடைத்த அரை மணி நேரத்திற்குள் நள்ளிரவு என்றும் பாராமல் நேரில் வந்து ஆய்வு நடத்திய தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகனின் இந்த அதிரடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications