எரியுதுடி மாலா..வெயிலால் அலறுது ஐரோப்பா! இந்திய தென்மேற்கு பருவமழைக்கு பாதிப்பு? அதென்ன Omega Block?
சென்னை: ஐரோப்பாவில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், அந்த கடுமையான வெப்ப அலை இந்திய தென்மேற்கு பருவமழையையும் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நிகழும் வானிலை மாற்றங்கள் சில நேரங்களில் இந்தியாவையும் மறைமுகமாக பாதிக்கலாம். ஆனால் தற்போது ஐரோப்பாவில் நிலவும் வெப்ப அலை இந்திய பருவமழையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரம் இல்லை என வானிலை நிபுணர்கள்தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக 'ஒமேகா பிளாக் (Omega Block)' எனப்படும் வானிலை அமைப்பு கருதப்படுகிறது.

வானிலை வரைபடத்தில் கிரேக்க எழுத்தான Ω (ஒமேகா) போன்ற வடிவத்தில் உருவாகும் உயர் காற்றழுத்த மண்டலமே ஒமேகா பிளாக் எனப்படுகிறது. இதில் ஒரு வலுவான உயர் காற்றழுத்த பகுதி, இருபுறமும் இருக்கும் குறைந்த காற்றழுத்த பகுதிகளுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறது.
ஒமேகா பிளாக்
இந்த அமைப்பு மிக மெதுவாக நகர்வதால், ஒரே மாதிரியான வானிலை பல நாட்கள் அல்லது சில வாரங்கள் கூட நீடிக்கும். உயர் காற்றழுத்தம் காரணமாக வானம் தெளிவாக இருக்கும். மேகங்கள் உருவாகாமல், மழை குறைந்து, சூரிய வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பதால் நீடித்த வெப்ப அலை உருவாகிறது. இந்நிலையில், ஐரோப்ப வெப்ப அலை இந்திய தென்மேற்கு பருவமழையையும் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐரோப்பா வெப்ப அலை
இதுதொடர்பாக பேசியுள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவன (IITM) விஞ்ஞானி டாக்டர் ராஜிப் சட்டோபாத்யாய்," ஒமேகா பிளாக் அமைப்பு ராஸ்பி அலைகள் (Rossby Waves) மற்றும் ஜெட் ஸ்ட்ரீம் (Jet Stream) எனப்படும் வளிமண்டல காற்றோட்டங்களுடன் தொடர்புடையது என்றார். ராஸ்பி அலைகள் வடக்கு அரைக்கோளத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வளிமண்டல அலைகள்.
வெப்பநிலை
இவை உயர் மற்றும் குறைந்த காற்றழுத்த மண்டலங்களை உருவாக்கி, வெப்பநிலை, மழை, புயல் உள்ளிட்ட வானிலை அமைப்புகளை ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டம் வரை மறைமுகமாக பாதிக்கக்கூடும். இந்த நிகழ்வையே 'Atmospheric Teleconnection' என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
இந்திய வானிலை
இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழக தேசிய வளிமண்டல அறிவியல் மையத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் அக்ஷய் டியோராஸ் கூறுகையில், உலகின் ஒரு பகுதியில் உருவாகும் பெரிய வானிலை அமைப்புகள் சில நேரங்களில் இந்தியாவையும் பாதிக்கலாம். ஆனால் தற்போது ஐரோப்பாவில் உருவாகியுள்ள ஒமேகா பிளாக் இந்திய வானிலையை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கும் என்று கூறுவதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றார்.
தென்மேற்கு பருவமழை
அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். அப்போது இதேபோன்ற ஒமேகா பிளாக் காரணமாக மேற்கு ஆசியாவின் வறண்ட காற்று இந்தியாவுக்குள் நுழைந்து, தென்மேற்கு பருவமழை சுமார் இரண்டு வாரங்கள் முன்னேறாமல் நின்றது. இருப்பினும், ஒவ்வொரு ஒமேகா பிளாக் நிகழ்வும் அப்படியே செயல்படும் என்று கூற முடியாது என்றும் அவர் விளக்கினார்.
எல் நினோ
விஞ்ஞானிகள் கூறுவதன்படி, ஒமேகா பிளாக் போன்ற நிகழ்வுகள் தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால் எல் நினோ (El Niño), லா நினா (La Niña) மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை மாற்றம் (Indian Ocean Dipole - IOD) போன்ற காலநிலை நிகழ்வுகள்தான் இந்திய தென்மேற்கு பருவமழையை ஒரு முழு பருவகாலம் முழுவதும் அதிகமாக பாதிக்கின்றன. எனவே, தற்போதைய ஐரோப்பிய வெப்ப அலை இந்திய பருவமழையை நேரடியாக பாதிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றம்
உலகம் முழுவதும் வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், காலநிலை மாற்றம் ஒமேகா பிளாக் போன்ற வானிலை அமைப்புகளையும் அதிகரிக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைக்கு இதுகுறித்து உறுதியான அறிவியல் முடிவு எதுவும் இல்லை. இருப்பினும், உலக வெப்பமயமாதல் காரணமாக பூமியின் அடிப்படை வெப்பநிலை ஏற்கனவே உயர்ந்திருப்பதால், ஒமேகா பிளாக் போன்ற அமைப்புகள் உருவானால் அவை முன்பைவிட அதிக கடுமையான வெப்ப அலையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
வானிலை நிபுணர்கள்
மொத்தத்தில், ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்ப அலைக்கும் இந்திய தென்மேற்கு பருவமழைக்கும் இடையே கோட்பாட்டு ரீதியில் தொடர்பு ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், தற்போது நடைபெற்று வரும் வெப்ப அலை இந்திய வானிலை அல்லது பருவமழையை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வானிலை நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications