“ஆதவ் அர்ஜுனா உள்நோக்கத்துடன் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளார்” - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 80 பணிகளுக்கு 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்கூட்டிய நிர்வாக அனுமதி பெற்றதாக உள்நோக்கத்துடன் தன் மீது உரிமை மீறல் புகாரை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்திருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.

80 பணிகளுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்கூட்டிய நிர்வாக அனுமதி அதன்மூலம் வழங்கப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும் தற்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானதும், நிதிநிர்வாக நடைமுறைகளைத் திட்டமிட்டுத் திரித்துக் கூறுவதுமாகும்.

EV Velu dmk

திமுக ஆட்சி நிறைவு காலத்தில் பேரவை ஒப்புதலின்றி ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமான அப்போதைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மீது உரிய விசாரணை நடத்தக் கோரியும் பேரவைத் தலைவரிடம் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார் அளித்தார்.

இதற்கு திமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், "2021-2026 காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, 14.01.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.6ன் வாயிலாக, 2026-2027ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்கூட்டிய நிர்வாக அனுமதி அதன்மூலம் வழங்கப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும் தற்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானதும், நிதிநிர்வாக நடைமுறைகளைத் திட்டமிட்டுத் திரித்துக் கூறுவதுமாகும்.

14.01.2026 நாளிட்ட அரசாணை (நிலை) எண் 6-ஐ முழுமையாகப் படித்தாலே, தற்போதைய அமைச்சரின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பது தெளிவாகும். அந்த அரசாணையின் 9ஆம் பத்தியில், 80 பணிகளுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது "Advance Administrative Sanction" அதாவது முன்கூட்டிய நிர்வாக அனுமதி - என்றே திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது அனுமதிக்கப்படும் தொகை 2026-2027ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒட்டுமொத்த அனுமதிக்குள் சரிசெய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் அதே பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் பத்தி 112ல் நெடுஞ்சாலைதுறைக்கு முன் கூட்டிய நிர்வாக அனுமதியான ரூ.2000 கோடியையும் சேர்த்து ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டப் பேரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

மேலும், இந்த அரசாணை நிதித் துறையின் ஒப்புதலின்றி வெளியிடப்பட்டதாகக் கூற முடியாது. அரசாணையின் 11ஆம் பத்தியில், 14.01.2026 நாளிட்ட நிதித் துறையின் ஒப்புதலுடன் இந்த ஆணை வெளியிடப்படுவதாகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக, "By Order of the Governor என ஆளுநரின் ஆணைப்படி அரசுச் செயலாளரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, எனது தனிப்பட்ட முடிவு என்றோ, சட்டமன்றத்தின் நிதி அதிகாரத்தை மீறி ரூ.2,000 கோடி செலவு செய்தேன் என்றோ கூறுவது உண்மைக்கும், அரசாணையில் உள்ள பதிவுகளுக்கும் முற்றிலும் முரணானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் Article 203 மானியக் கோரிக்கைகள் தொடர்பான சட்டமன்ற நடைமுறையையும், Article 204 மாநிலத்தின் தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பதற்கான ஒதுக்கீட்டுச் சட்ட நடைமுறையையும் குறிப்பிடுகின்றன. ஆனால், இவ்விரு Articles-லும் எதிர்வரும் நிதியாண்டுக்கான பணிகளுக்கு முன்கூட்டிய நிர்வாக அனுமதி வழங்கக்கூடாது என்று எங்கும் கூறப்படவில்லை.

ஒரு பணிக்கு நிர்வாக அனுமதி வழங்குவது வேறு; அரசின் தொகுப்பு நிதியிலிருந்து உண்மையில் பணத்தை எடுத்துச் செலவிடுவது வேறு. அரசமைப்புச் சட்டத்தின் Article 204(3) தடை செய்வது, சட்டப்படி செய்யப்பட்ட ஒதுக்கீடு இல்லாமல் தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பதைத்தான். இந்த அரசாணையின் மூலம் ரூ.2,000 கோடி தொகுப்பு நிதியிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, செலவிடப்பட்டதாகவோ சொல்லமுடியாது.

அரசாணையின் பத்தி 10-ல் செலவினம் பதிவு செய்யப்பட வேண்டிய கணக்குத் தலைப்புகள் குறிப்பிடப்பட்டிருப்பது, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2,000 கோடி செலவிடப்பட்டது எனச் சொல்லமுடியாது. அரசுக் கணக்கில் செலவினம் எந்தக் கணக்குத் தலைப்பின்கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதை மட்டுமே அது குறிக்கிறது. சட்டப்படியான நிதி ஒதுக்கீட்டிற்கு உட்பட்டே உண்மையான செலவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

நெடுஞ்சாலைப் பணிகள் என்பது ஒரே நாளில் தொடங்கி முடிக்கக்கூடியவை அல்ல. கள ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை, நிலம் மற்றும் கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வு, மதிப்பீடு, தொழில்நுட்ப ஒப்புதல், ஒப்பந்தப்புள்ளி மற்றும் பணியாணை போன்ற பல்வேறு கட்டங்கள் அதில் உள்ளன. எனவே, ஒரு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கான நிர்வாக நடவடிக்கைகளை முந்தைய நிதியாண்டிலேயே தொடங்குவது, வளர்ச்சிப் பணிகள் தாமதமின்றி நடைபெறுவதற்கான வழக்கமான நிதிநிர்வாக நடவடிக்கையாகும்.

பொதுவாகவே ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதால் மட்டும் ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் கருத முடியாது. எந்தப் பணிக்காக, எந்தத் தேதியில், எந்த நிதியாண்டின் ஒதுக்கீட்டிலிருந்து, எவ்வளவு தொகை உண்மையில் செலவிடப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. எனவே, முன்கூட்டிய நிர்வாக அனுமதியை உண்மையான நிதிச் செலவினமாகத் திரித்து, அரசமைப்புச் சட்டத்தின் Articles 203 மற்றும் 204 மீறப்பட்டதாகக் கூறுவது சட்டரீதியாக நிலைக்கக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. இதில் சட்டமன்றத்தின் உரிமையையோ மாண்பையோ பாதிக்கும் எந்தச் செயலும் நடைபெறாததால், உரிமை மீறல் பிரச்சனை எழுவதற்கே இடமில்லை.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 202 முதல் 206 வரையிலான உறுப்புகளை நான் மீறியதாகக் கூறுவது சரியல்ல. நிர்வாக அனுமதி வழங்குவதற்கும், தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுத்துச் செலவிடுவதற்கும் இடையிலுள்ள அடிப்படை வேறுபாட்டை மறைத்து, அரசியல் ஆதாயத்திற்காக உரிமை மீறல் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் நான் சட்டமன்றத்தையோ, மாண்புமிகு பேரவைத் தலைவரையோ, பேரவையின் உரிமைகளையோ எந்த வகையிலும் அவமதிக்கவில்லை; பேரவையின் மாண்பைக் குறைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை.

ஆகவே, இதில் உரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதைப் போன்ற அரசு ஆணைகள் இதற்கு முன்பும் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், புறவழிச்சாலைகள் ஆகியவற்றை விரிவாக்கம் செய்து மேம்படுத்த ரூ.13,967.10 கோடிக்கு அதிமுக ஆட்சியில் ஒப்புதல் வழங்கப்பட்டு அரசு ஆணை எண் 16 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை நாள்: 29.1.2021ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இத்தொகையை ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப் பட்டுள்ளது. முதல் ஆண்டில் ரூ.5,313 கோடியும், இரண்டாம் ஆண்டு ரூ.5,450.30 கோடியும் மூன்றாம் ஆண்டில் ரூ.3230.80 கோடியும் பெற்று திட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல. உண்மையான உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கான உயரிய நடைமுறையாகும். எனவே, நிர்வாக அனுமதியையும் உண்மையான நிதிச் செலவினத்தையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+