லண்டன் போனாலும் விடமாட்டேன்.. சண்டை நடக்கும்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு
சென்னை: நான் வெளிநாட்டிற்கு படிக்க சென்றாலும் என்னுடைய இதயம் தமிழகத்தில் தான் இருக்கும். இத்தனை காலமாக எப்படி சண்டை போட்டோமோ அதேபோல் தொடர்ந்து என்னுடைய சண்டை இருக்கும். எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்த கருத்தில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன், அவர் கேட்ட கேள்விக்கு நான் பதில் தான் கூறினேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து பேசிய அண்ணாமலைக்கு எதிராக நேற்றும், இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து பேசி வருகிறார்கள். இந்த சூழலில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் செல்கிறார். விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. செப்டம்பர் அக்டோபர் முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். கிராமத்தை நோக்கி பாஜகவினர் வர இருக்கிறோம். பாஜக உறுப்பினர் சேர்க்கை வரும் 1 ஆம் தேதி தொடங்குகிறது. பாஜக தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக இணையலாம். செப்டம்பர் 2 ஆம் தேதியில் இருந்து உங்களை தேடி வருவோம்.
மறுபடியும் கிளை தலைவர் முதல் மாவட்ட தலைவர்கள் வரை தேர்தல் நடத்த வேண்டும். இதையெல்லாம் எங்க பாஜக தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நானும் ஒரு 3 மாத காலம் தூரத்தில் பயணம் செய்ய வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது. என் வாழ்க்கையில் இது முதல் முறை. இந்த 3 மாதம் தமிழகத்தை தாண்டி எங்கே இருந்தாலும் கூட என் இதயம் தமிழகத்தில் தான் இருக்கும்.
இத்தனை காலமாக எப்படி சண்டை போட்டோமோ, மூன்று மாத காலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருந்தாலும் கூட தொடர்ந்து என்னுடைய சண்டை இருக்கும். ஆளுங் கட்சியோட தவறுகளாக இருந்தாலும், முக்கியமான விஷயங்களிலும் நேரம் கொடுத்து, பார்த்து அறிக்கை மூலமாக என்னுடைய கருத்துக்களை தெரிவிப்பேன். எங்களுடைய தலைவர்கள் இதனை பார்த்து கொள்வார்கள். நவம்பர் மாதம் கடைசியில் வருவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "2019 ஆம் ஆண்டில் எடப்பாடி வாரணாசி போகவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நான் அரசியலுக்கு வந்த பிறகு எடப்பாடி ஏன் போகவில்லை என்பதும் எனக்கு தெரியும். சீமான் அன்று சொன்னார், எடப்பாடி ஒரு அடிமை, எப்பா! எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவீங்க.. அவர் பதவியை விட்டு இறங்கினால் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான் என்று சீமான் கூறினார்.
அந்த வீடியோவை நான் வெளியில் விடவா?... இதனால் இதையெல்லாம் சொல்லக்கூடாது. சீமான் அண்ணனை பிடிக்கும். இது எல்லாம் வேற.. ஆனால் இந்த வார்த்தையை சீமான் சொன்னாரா இல்லையா? அடிமைக்கெல்லாமா பயப்படுவீங்க.. அது தரமில்லை?.. அது தரமிருக்க கூடிய சொல்?.. இப்படி நான் பேச ஆரம்பித்தால் அது வேற மாதிரி போகும்.. வேணாம்.. ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் இதற்கு எண்டே இல்லாமல் போகும்.
எடப்பாடி பழனிசாமி சொன்னாங்க, நான் கையை காலை பிடித்து வந்தேன்.. உழைக்காம வந்தேன் என்று அவங்க கொன்னாங்க.. அதற்கு தான் நான் பதில் கூறினேன். நான் இருக்கும் பதவிக்கு, இருக்கைக்கு நான் பதில் சொல்ல வேண்டியது கட்டாயம்" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications