இதைக்கூடவா கவனிக்கிறார் முதல்வர்.... கால்வலி தீர அக்கறையுடன் உத்தரவு...நெகிழ்ந்த ஊழியர்கள்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அரசு சட்டப்பேரவையில் வெளியிடும் சில முக்கிய அறிவிப்புகளைத்தாண்டி நுணுக்கமாக வெளியிடும் அறிவிப்புகள் பொதுமக்களை அதிகம் கவர்கிறது. இப்படிக்கூடவா நுணுக்கமாக கவனிப்பார்கள் என சம்பந்தப்பட்டவர்கள் நெகிழ்ச்சியடைகின்றனர்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் உடனடியாக 5 அறிவிப்புகளை வெளியிட்டார், அதில் முதல் அறிவிப்பாக பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசப்பயணம் என்கிற அறிவிப்பு. மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும் இந்த அறிவிப்பின் பின் சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய உதவி உள்ளது.

தமிழகத்தில் வயல்வேலை, நூறு நாள் வேலை மற்ற வேலைகளுக்கு பெண்கள் அதிக அளவில் செல்கின்றனர். இதற்கு பேருந்துக்காக அவர்கள் செலவழிப்பது மாதம் ரூ. 1500 வரை வரும். இன்றும் தமிழகத்தில் வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள் குடும்பத்தைக்காக்க வெளியில் செல்லும்போது போக்குவரத்துக்காக அவர்கள் இழக்கும் ரூ.1500 ரூபாயையும் மிச்சப்படுத்தி அந்தத் தொகை குடும்பத்திற்கு சேரும் வகையிலான அறிவிப்பு என்பதை நுணுக்கமாக பார்த்தால் தெரியும்.
அதேப்போன்றதொரு அறிவிப்புதான் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு. துணிக்கடைகள் உட்பட பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு/ பணிபுரிபவர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என்கிற மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மேலோட்டமாக பார்த்தால் என்னடா பணியாளர்களுக்கு நாற்காலி வழங்க ஒரு மசோதாவா என்று தோன்றும்.
ஆனால் தொழிலாளர் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளில் இது உள்ளது. ஆனாலும் நடைமுறையில் இல்லை என்பதே அவலமான உண்மை. இன்றும் தமிழகத்தில் உள்ள பெரும் நிறுவனங்களில், ஷாப்பிங்க் மால்களில், பெரும் ஜவுளிக்கடைகளில், நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களை முகம் சுழிக்காமல் வரவேற்று அவர்கள் கேட்கும் பொருட்களை காண்பித்து விற்பனை செய்யும் ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களில் உட்கார நாற்காலி இல்லாமல் நிற்கும் நிலையே உள்ளதைக் காணலாம்.
சிலருக்கு மட்டும் சில இடங்களில் நாற்காலி இருக்கும் பெரும்பாலானோர் நின்றுக்கொண்டே இருக்கும் நிலைதான் உள்ளது. இதில் இவர்களில் பெரும்பாலானோர் 10 முதல் 12 மணி நேரம் பணியாற்றும் நிலை உள்ளது. இந்நிலையில் இப்போது நினைத்துப்பாருங்கள், இது எவ்வளவு நுணுக்கமான முக்கியமான மசோதா என்று.
கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்களுக்கு இருக்கைகள் வழங்கவுதற்கான சட்ட திருத்தம் செய்வதற்கான சட்டமுன்வடிவை இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுவதன் விளைவாக பல்வகையான உடல்நலக்கேடுகள் ஆளாகின்றனர். இதற்கு வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்குவது அவசியமென அரசு கருதுகிறது. இதற்கு தகுந்த இருக்கைகளை நிறுவனங்கள் ஏற்படுத்தி தரவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாகரம் தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு நடந்த மாநில தொழிலாளர் ஆலோசனைக்குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவதற்கு குழுவின் உறுப்பினர்கள் பரிந்துரை அளித்துள்ளதாகவும், அதை ஒத்த கருத்துடன் ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு வழிவகுக்கும் வகையில் , 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்து சட்ட முன்வடிவு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவு இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவும் வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு சிறுவிஷயங்களையும் நுணுக்கமாக கவனித்து அரசு நிறைவேற்றினாலும் அதை நடைமுறைப்படுத்துவது சம்பந்தப்பட்டவர்கள் கையிலேயே உள்ளது. ஆகவே இதையும் தொழிலாளர் நலத்துறையின் கீழுள்ள அதிகாரிகள் கவனித்து செயல்படுத்தினால் அரசின் எண்ணம் சாமானிய மக்களை சென்றடைய வாய்ப்புண்டு.












Click it and Unblock the Notifications