‛‛அனைவரும் பைத்தியமாகி விட்டனர்’’.. ‛எக்ஸ்’ பக்கத்தில் கிருத்திகா உதயநிதி பரபரப்பான பதிவு!
சென்னை: ‛‛அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர்'' என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று போட்டுள்ள பதிவு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். உதயநிதியின் மனைவி கிருத்திகா. இவர் திரைப்பட இயக்குனராக உள்ளார்.

வணக்கம் சென்னை எனும் படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்நிலையில் தான் கிருத்திகா உதயநிதி இன்று எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவு பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதாவது அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடத்தையால் நான் கவர்ந்திழுக்கப்பட்டேன். ஏனென்றால் அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர்'' என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த சிலர் கிருத்திகா உதயநிதிக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் அவருக்கு எதிராக கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இன்னொரு தரப்போ கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவின் பின்னணி என்ன?, கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவின் அர்த்தம் என்ன? என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இதனால் அவரது பதிவு என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் கிருத்திகாவின் இந்த பதிவின் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் மங்கை. இந்த படத்தில் சிவின் கணேசன், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர். அமைச்சர் குபேந்திரன் காமாட்சி இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. போஸ்டரை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர்.
அதேபோல் திரைப்படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டு இருந்தார். இந்த திரைப்படத்தை தயாரித்தவர் ஜாபர் சாதிக். இவர் தற்போது போதைப்பொருள் கடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த மாதம் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் எனும் பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தியதாக 3 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஜாபர் சாதிக்கை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா தயாரிப்பாளராக உள்ள இவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் மங்கை திரைப்படத்தை எடுத்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் மங்கை திரைப்படத்தின் பாடலை வெளியிட்ட கிருத்திகாவை தேவையில்லாத விஷயங்களில் தொடர்புபடுத்தி சிலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் தான் கிருத்திகா உதயநிதி இப்படி பதிவிட்டு இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications