அதிமுகவில் மீண்டும் இணைந்தார் மாஜி அமைச்சர் அன்வர் ராஜா.. எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான அன்வர் ராஜா மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூறியதால் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அன்வர் ராஜா.
அதிமுவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான அன்வர் ராஜா ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணா, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்த நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனப் பேசியதால், விளக்கமே கேட்கப்படாமல் கடந்த 2021ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், சசிகலா பக்கம் இருந்த அன்வர் ராஜா. பிறகு சசிகலா சிறைக்குப் போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பரில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் அன்வர் ராஜா. அவர் மீது ஏற்கனவே பல விவகாரங்களில் கட்சியின் இரட்டைத் தலைமை அதிருப்தியில் இருந்ததால் உடனடியாக நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இஸ்லாமியர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சிஏஏ உள்ளிட்ட சட்டங்களை அதிமுக ஆதரித்து வாக்களித்ததால் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் அன்வர் ராஜா. அப்போது மாநிலங்களவையிலும் அன்வர்ராஜா அதை எதிர்த்து பேசினார். 2019 லோக்சபா தேர்தலில் அன்வர்ராஜா ஓரங்கட்டப்பட்டார். ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் அன்வர் ராஜா. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றும் கூறி வந்தார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதையடுத்து கட்சியில் அவரது பேச்சு எடுபடாத நிலையில், "தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சின்னம்மா வர வேண்டும்" என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது
அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரை திமுகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ராமநாதபுரம் மாவட்ட அமைச்சரான ராஜகண்ணப்பன், அன்வர் ராஜாவிடம் பேசி, சிறுபான்மையினத்தின் முக்கிய தலைவரான நீங்கள் திமுக பக்கம் தான் இருக்க வேண்டும், அதிமுகவில் உங்களுக்கு மரியாதை இல்லை, வந்துவிடுங்கள் எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும், அன்வர் ராஜா திமுக பக்கம் செல்லவில்லை.
கடந்த பல மாதங்களாக அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த அன்வர் ராஜாவை ஓ. பன்னீர் செல்வம் தரப்பு, தங்கள் பக்கம் சேர்ப்பதற்காக அவரை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் அன்வர் ராஜா சொல்லவில்லை.
கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து விட்டு பேசிய அன்வர் ராஜா. அதிமுகவை இணைக்கவும் அதில் இணையவும் காத்திருக்கிறேன். அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர். ஒரு அவதாரம். அவரின் பக்தனாக தொடர்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கட்சியில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் இணைந்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதனையடுத்து இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார் அன்வர் ராஜா. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்வர் ராஜா. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications