சிக்கிய சி.விஜயபாஸ்கர்.. விஜய்க்கு தர்மசங்கடம்! ரூ.4 கோடி மோசடி புகார்.. கோர்ட் முக்கிய உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய ரூ.4.5 கோடியில் மீதி ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக, அதிமுகவைச் சேர்ந்த தன விமல் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

C Vijayabaskar Alangudi tvk

வழக்கின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டவர் தன விமல். அப்போது புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், 2025 நவம்பர் 11 அன்று தான் விமலை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.

"தேர்தலில் போட்டியிட்டுச் செலவு செய்ய உன்னிடம் போதிய பண வசதி உள்ளதா என்பதை நிரூபிக்க வேண்டும். எனவே ரூ.5 கோடி பணத்தைக் காட்ட வேண்டும்" என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்த உடனே அந்தப் பணம் முழுவதையும் திருப்பித் தந்துவிடுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

பணம் கைமாறியது எப்படி?

விஜயபாஸ்கர் கொடுத்த வாக்குறுதியை நம்பிய தன விமல், பல வழிகளில் முயற்சி செய்து ரூ.4.5 கோடி பணத்தைத் திரட்டினார். பின்னர், விஜயபாஸ்கர் சொன்னபடி, புதுக்கோட்டையில் உள்ள ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரது அலுவலகத்தில் வைத்து 2026 மார்ச் 11 அன்று அந்த ரூ.4.5 கோடி பணத்தைக் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக தன விமல் அறிவிக்கப்பட்டார். ஆனால், தேர்தல் அறிவிப்பு வந்ததும் விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து வெறும் ₹50 லட்சம் மட்டுமே திருப்பித் தரப்பட்டது. மீதமுள்ள ரூ.4 கோடி பணத்தை அவர் திருப்பித் தரவே இல்லை.

சொத்து அடமானம் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டு

அதுமட்டுமின்றி, தன விமலின் தந்தைக்குச் சொந்தமான இடத்தை, விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவரிடம் அடமானம் வைத்துத் தருவதாகக் கூறி வாங்கப்பட்ட ரூ.10 லட்சத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பணத்தைத் திரும்பக் கேட்பதற்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சுமார் 14 முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் எந்தப் பணமும் கிடைக்கவில்லை. மாறாக, பணத்தையும் பத்திரங்களையும் கேட்கும் போதெல்லாம் விஜயபாஸ்கர் தன்னை மிரட்டுவதாகவும், அரசியல் செல்வாக்கு மிக்க ஆளுங்கட்சியில் அவர் இப்போது இருப்பதால் தன்னை அச்சுறுத்துவதாகவும் தன விமல் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

காவல் துறையில் புகார் - நீதிமன்றத்தை நாடிய வேட்பாளர்

இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததால், தன விமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தன் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், "இந்த புகார் குறித்து விசாரணை நடத்த தன விமலுக்கு ஆகஸ்ட் 28 அன்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செப்டம்பர் 10 வரை அவகாசம் கேட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை செப்டம்பர் 15-க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். தேர்தல் சீட்டுக்காகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.4 கோடி விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது விஜயபாஸ்கர் தவெகவில் உள்ள நிலையில் விஜய்க்கு இது தர்மசங்கடமாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+