மதுரவாயல் டூ துறைமுகம்.. சென்னையின் கம்பீரம் "ஈரடுக்கு மேம்பாலம்".. மத்திய அரசு தந்த ஹேப்பி நியூஸ்
சென்னை: மதுரவாயல் டூ துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் குறித்து புதிய தகவல் ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான எதிர்பார்ப்பும் தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது.
சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த திமுக ஆட்சிக்காலத்திலேயே முடிவு செய்யப்பட்டிருந்தது.. இதற்கான பணிகளும் துரிதமாக ஆரம்பமாகின.. ஆனால், அதற்குள் அதிமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.

இதையடுத்து, கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்த திட்டம் இருப்பதாக சொல்லி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்துவிட்டது. இதனால் பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டன.
திமுக ஆட்சி: இதற்கு பிறகு 10 வருடம் கழித்து, மீண்டும் திமுக அரியணை ஏறியது.. உடனடியாக இதே திட்டத்தை மீண்டும் கையிலெடுத்தது.. மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பால சாலைத்திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அதிரடியாக அறிவிப்பையும் வெளியிட்டது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டினார். மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் அனுமதியுடன் இதற்கான பணிகளும் ஆரம்பமாகின. சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் துவங்கப்பட்டன. கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் இதன் திட்டம் உருவாக்கப்பட்டது.
மேம்பாலம்: சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ. வேலுவும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரவாயல்-துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாலம் கட்ட ஏற்கனவே மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே, ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்கவேண்டும் என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
அதற்கேற்றவாறு, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்படும் பறக்கும் சாலைக்கான மாதிரி படத்தை, கடந்த வருடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விட்டரில் வெளியிட்டபோது, அந்த படம் பலரது கவனத்தையும் அப்போது பெற்றிருந்தது.
அதேபோல, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், 2024 டிசம்பரில் நிறைவடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இதுகுறித்து தெரிவித்தவாறே இருந்தனர்.
புதிய தகவல்: இப்படிப்பட்ட சூழலில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் ஜூன் 2026ல் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. கடந்த 10 ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்ட திட்டம் ஈரடுக்கு சாலையாக மாற்றப்பட்டது என்றும், இந்த பறக்கும் சாலைத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் நிதின் கட்கரி இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இந்த பாலம் மட்டும் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும் என்றும் பயண நேரம் குறையும் என்றும் கூறப்படுகிறது..
பயன்கள்: அதுமட்டுமல்ல, பகல் நேரங்களிலும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்படலாம். அதேபோல, துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மதுரவாயல் பகுதியில் இருந்துசரக்கு கொள்முதல் வாகனங்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் துறைமுகம் செல்ல முடியும்.. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வெளியே வரவும் முடியும்.
மொத்தத்தில் இந்திய மாநிலங்களிலேயே முதல்முறையாக 2 அடுக்கு சாலையாக அமைய உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications