Exclusive Report: மாங்காடு மாணவியிடம் போனில் "சாட்" தொல்லை.. அந்த 2 இளைஞர்கள் யார்? தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை மாங்காடு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த தற்கொலையில் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. கருவறையும், கல்லறையும்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம். எனக்கு வாழவே பிடிக்கவில்லை. எனக்கு அந்த கனவு வந்து போகிறது. மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் கூட பாதுகாப்பான இடம் கிடையாது, என்று மாணவி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Recommended Video
அந்த மாணவியின் மரணத்தை தொடர்ந்து நேரடியாக களத்திற்கே சென்று விசாரித்தோம். மாங்காட்டில் இருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றில் அந்த மாணவியின் வீடு இருக்கிறது. பிஞ்சு சிறுமி இறந்த சோகத்தில் மொத்த அபார்ட்மெண்டும் களையிழந்து காணப்பட்டது. மொத்த வீட்டிலும் ஒரு சோகம்.. அமைதி.. பதற்றம் காணப்பட்டது.
உறவினர்கள் பலர் வெளியே கண்ணீருடன்.. மாணவியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் நின்று கொண்டு இருந்தனர். அண்டை வீட்டார்கள் பலர் முகம் முழுக்க அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். கொஞ்சி கொஞ்சி தூக்கி வளர்த்த தங்கள் மகளை பறிகொடுத்த சோகத்தில் நிசப்தம் மட்டுமே எஞ்சி இருந்தது அந்த வீட்டில்...

விசாரணை
ஆங்காங்கே போலீசார் விசாரணை நடந்துகொண்டு இருந்த காரணத்தாலும், பல்வேறு மீடியா ரிப்போர்ட்டர்கள் குழுமி இருந்ததாலும் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. அந்த மாணவி மாங்காட்டில் இருக்கும் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கு இருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றில் இவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். குடும்பம் மிடில் கிளாஸ். மாணவியின் அப்பா ஒரு வங்கியில் கிளர்க்காக இருக்கிறார்.

மாணவி குடும்பம்
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் அம்மா வீட்டை கவனித்துக் கொள்கிறார். அந்த மாணவியின் அக்கா தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது மாணவியின் தற்கொலையால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கி உள்ளது.

இரண்டு பேர்
நேரடியாக களத்தில் போலீசார் தரப்பிடமும், விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்ததில், போலீசார் தற்போது இரண்டு இளைஞர்களை விசாரித்து வருவது தெரிய வந்தது. அந்த மாணவியின் கடிதத்தில் இருந்த சில விஷயங்களை அடிப்படையாக வைத்தும், மாணவியின் செல்போனில் இருந்த மெசேஜ்களை அடிப்படையாக வைத்தும் இந்த விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.

பறிமுதல்
நேற்று மாணவி இறந்த செய்தி கேட்டு மாங்காடு போலீசார் அங்கே சென்றதும் போனையும், கடிதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இரவே 2 இளைஞர்களை பிடித்து விசாரித்து உள்ளனர். போலீசார் தரப்பில் விசாரித்ததற்கு.. "அந்த இரண்டு இளைஞர்களும் சென்னையில் மாங்காட்டில் மீன் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறார்கள். அதில் ஒருவர் 17 வயது மட்டுமே கொண்ட மைனர்.. இரண்டு பேர் மீதும் சந்தேகம் இருக்கிறது.. ஆனால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது" என்று போலீசார் தரப்பு நம்மிடம் தெரிவித்தது.

செல்போன்
இவர்களின் செல்போன் சாட் அந்த மாணவியின் போனில் இருந்துள்ளது. இவர்கள் மீது போலீசாருக்கு அதிக சந்தேகம் இருப்பதால் அவர்களிடம் நேற்று இரவு தொடங்கிய விசாரணை இப்போது வரை முடியாமல் சென்று கொண்டு இருக்கிறது. அந்த மாணவியிடம் இரண்டு பேரும் செல்போனிலும், வாட்ஸ் ஆப்பிலும் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பு நம்மிடம் தெரிவித்தது.

இன்னொரு இளைஞர்
இது போக இன்னொரு இளைஞரிடமும் போலீசார் நேற்று இரவு விசாரணை நடத்தினர். அந்த இளைஞர் மாணவிக்கு அண்ணன் முறை வரக்கூடிய உறவினர். கல்லூரியில் படித்து வருகிறார். மாணவியும், இவரும் நட்பாக இருந்துள்ளனர். "எங்க பொண்ணு அண்ணன் என்பதால் அந்த பையன் கிட்டதான் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.. அவருக்குத்தான் எல்லாம் தெரியும்" என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் நேற்று இரவு விசாரணை நடத்தினர். இதற்கு அந்த இளைஞர் " மாணவி என்னுடன் அண்ணன் என்பதால் பாசமாக இருப்பார். வயசு கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதால் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார். ஆனால் சமீபமாக நாங்கள் பேசவில்லை. நானும் காலேஜ் தொடங்கிவிட்டதால் அங்கே சென்றுவிட்டேன்.

பேச முடியவில்லை
கல்லூரி சென்ற பின் மாணவி என்னிடம் சரியாக பேசவில்லை. அவருக்கு என்ன பிரச்சனை, யார் தொல்லை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரிடம் மட்டும் விசாரணை முடித்துவிட்டு போலீசார் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

தொடரும் விசாரணை
மற்ற இரண்டு இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியிடம் செல்போன் மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications