அதிமுகவில் நீக்கம்.. தவெகவில் அமைச்சர் பதவி.. ரிஸ்க் எடுத்த செங்கோட்டையனுக்கு அடித்த ஜாக்பாட்!
சென்னை: தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக முக்கிய முகமாக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் பயணம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒருகாலத்தில் அதிமுகவின் முக்கிய தூணாக கருதப்பட்ட அவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அரசியல் ரீதியாக அவரது எதிர்காலம் முடிந்துவிட்டதாக பலரும் விமர்சித்தனர். ஆனால், அந்த கணிப்புகளை எல்லாம் முறியடித்து தற்போது தவெக ஆட்சியில் முக்கிய அமைச்சராக பதவி ஏற்றிருப்பது தமிழக அரசியலில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியலில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் மிகப்பெரிய பலமாக அறியப்பட்டவர். பல முறை அமைச்சராக பதவி வகித்ததுடன், கட்சியின் அமைப்பை வலுப்படுத்திய முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். குறிப்பாக ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது. அதன் காரணமாக, அவர் எடுத்த ஒவ்வொரு அரசியல் முடிவும் கவனத்தை ஈர்த்தது.

அரசியலில் ட்விஸ்ட்
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சனைகள் மற்றும் தலைமைக்கு எதிரான கருத்து வேறுபாடுகள் காரணமாக செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் அரசியலில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது அரசியலில் ட்விஸ்ட்டை ஏற்படுத்தியிருந்தது.
அப்போது, பலரும் செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த முடிவு மிகப்பெரிய ரிஸ்க் என விமர்சித்தனர். ஆனால் அந்த முடிவே தற்போது அவருக்கு மிகப்பெரிய அரசியல் பலனாக மாறியுள்ளது. தவெக வெற்றிக்கு செங்கோட்டையனின் அனுபவமும், கொங்கு மண்டலத்தில் இருந்த வாக்கு செல்வாக்கும் முக்கிய காரணமாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் அவருக்கிருந்த பழைய ஆதரவாளர்கள் தவெகவுக்கு திரும்பியதே கட்சிக்கு கூடுதல் பலமாக அமைந்ததாக பார்க்கப்படுகிறது.
ரிஸ்க் எடுத்தவருக்கு அமைச்சர் பதவி
தற்போது தவெக அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. "அரசியலில் சரியான நேரத்தில் எடுக்கப்படும் ரிஸ்க் வாழ்க்கையை முழுவதும் மாற்றிவிடும்" என்பதற்கான உதாரணமாக அவரது பயணம் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் அதிமுகவில் இருந்து நீக்கம், மறுபுறம் புதிய கட்சியில் அமைச்சர் பதவி என்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதுமட்டுமல்லாமல், கொங்கு மண்டத்தில் திமுக, அதிமுகவில் இருந்தும் பலர் தவெகவுக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications