வெடிக்க போகுது தங்கம் விலை.. அப்புறம் பல மாதங்கள் ரேட் ஏறவே ஏறாதாம்.. எச்சரிக்கும் பிரபல வல்லுநர்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், பொதுமக்களால் அதை வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தங்கம் பப்பிள் போன்ற ஒரு சூழலுக்குப் போய்க் கொண்டு இருக்கலாம் என்றும் இதனால் மிக மோசமான சரிவு தங்கத்தில் ஏற்படலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படிச் சரியும்போது பல காலம் தங்கம் விலை உயராமலேயே இருக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள்.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆண்டின் இறுதி வரை தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தங்கம் விலை
இது தொடர்பாக பி.எல். கேபிடல் நிறுவனத்தின் இயக்குநர் சந்தீப் ராய்ச்சுரா கூறுகையில், "முதலீடுகளில் இந்த ஆண்டு தங்கம் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் $3,791.11 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். சர்வேதச பொருளாதார வல்லுநர்களின் இலக்கையும் கூட அது தாண்டியது.
இந்தளவுக்கு உயர்ந்ததே இல்லை
வரலாற்றில் தங்கம் விலை இந்தளவுக்கு வேகமாக அதிகரித்ததே இல்லை. இதனால் அடுத்து எந்தளவுக்குத் தங்கம் விலை உயரும் என்பதைத் தீர்மானிப்பது கடினம். இருப்பினும், அது $4800 வரை போகும் என்றே நினைக்கிறோம். அதேநேரம் மிக வேகமாகத் தங்கம் விலை உயர்ந்து வருவதால் அதன் விலை சட்டென குறையவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்" என்றார். அதாவது எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ.. அதே அளவுக்கு வேகமாகத் தங்கம் விலை சரியலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
எப்போது நிறுத்த வேண்டும்
சந்தீப் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "சர்வதேச மார்கெட்டில் ஒரு அவுன்ஸ் தங்கம் $3444க்கு கீழ் சில காலம் இருந்தால்.. அதன் விலை நீண்ட கால நோக்கில் சரியப் போகிறது என்பதற்கான சிக்னலாகும். குறுகிய காலத்தில் தங்கத்தில் டிரேட் செய்வோர் உடனே அப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரம் நீண்ட கால முதலீடாகக் கருதி முதலீடு செய்வோர் அந்தச் சரிவிலும் தங்கம் வாங்கலாம். அதேநேரம் தங்கம் விலை ஓவராக ஏறிவிட்டதால் சரிந்தால் அதன் சரிவு பல மாதங்கள் நீடிக்கலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
வெடிக்க வாய்ப்பு
குறுகிய காலத்தில் இப்படி உயர்வதால் அது பப்பிள் சூழலுக்குள் (bubble territory) போய்விடுமோ என்ற அச்சமும் ஒரு சிலருக்கு இருக்கிறது. எந்தவொரு பொருளாக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் அதன் விலை பல மடங்கு உயர்ந்தால், அது ஒரு நாள் வெடிக்கும். அப்படி வெடிக்கும்போது அதன் சரிவு மிக மோசமாக இருக்கும். தங்கமும் அதுபோன்ற ஒரு நிலைக்குள் போய்விட்டதோ எனப் பலரும் அஞ்சுகிறார்கள்.
இது தொடர்பாகச் சர்வதேச நிதி நிறுவனமான JP மோர்கன் தலைவர் ஜேமி டிமான் சிஎன்பிசி டிவி18க்கு அளித்த பேட்டியில், "நாம் பப்பிள் நிலைக்குள் நுழைகிறோமோ என்ற சந்தேகம் இருக்கிறது. தங்கம் பப்பிள் நிலைக்குள் போய்விட்டது என நான் சொல்லவில்லை. ஆனால், அது அந்த நிலைக்குப் போவது போலவே தெரிகிறது. பங்குச்சந்தை, தங்கம், கிரிப்டோ என எல்லாமே புதிய உச்சத்தில் இருக்கிறது. எனவே கவனம் தேவை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications