மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரயில் மாறியது எப்படி? கவரப்பேட்டையில் வல்லுநர் குழு விசாரணை!
சென்னை: கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் வல்லுநர் குழுவினர் நேரடி ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்துக்கு காரணம் சதி வேலையா? மனித தவறா? சிக்னல் கோளாறா என்பதை உறுதி செய்ய ஆய்வு நடத்தி வருகின்றனர். ரயில், பிரதான தடத்தில் இருந்து லூப் டிராக்கிற்கு மாறியது எப்படி என நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 8.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது திடீரென மோதியது.

இதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில், பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீசார், ஆர்.பி,எஃப் போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த சுமார் 19 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகள் ரயில் மற்றும் தமிழக அரசு ஏற்பாடு செய்த பேருந்துகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மீண்டும் தர்பங்காவுக்கு மாற்று ரயில் மூலம் புறப்பட்டுள்ளனர். அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்காவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.
மோப்ப நாய்களை கொண்டு தடம்புரண்ட ரயில்களில் யாரேனும் சிக்கி இருக்கிறார்கள் என தேடுதல் பணி நடைபெற்றது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் ரயில் பாதை மோசமாக சேதமடைந்துள்ளது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே உள்ளன. அதனை கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறிய காரணத்தால் வெல்டிங் செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் இந்த பாதையில் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து காரணமாக இரு மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, அதிர்வு ஏற்பட்டு, கிளை பாதையில் அதாவது லூப் லைனில் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
ரயில் விபத்து நடந்த இடத்தில் 12 மணி நேரத்துக்கும் மேலாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்று காலையில் மழை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது பணிகள் நடந்து வருகின்றன. ராட்சத கிரேன்கள் உதவியுடன் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்று நண்பகல் 1 மணிக்குள் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் இருந்து வந்துள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்பு வல்லுநர் குழுவினர், விபத்து நடந்த இடத்தில் நேரடி ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மெயின் டிராக்கில் செல்ல வேண்டிய பாக்மதி ரயில் லூப் லைனிற்கு மாறியது எப்படி என வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது.
சிக்னல் கோளாறா, மனித தவறா அல்லது சதிச் செயலா என்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்டக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. வல்லுநர்கள் குழுவின் ஆய்வின் தொடர்ச்சியாக, ரயில் விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்குவார்கள். அதன் பிறகு ரயில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications