வந்தே பாரத்துக்காக மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைப்பு.. பயணிகள் பரபரப்பு புகார்!
சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்க சொன்னதால் பயணிகள் பலர் வேதனையில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
வந்தே பாரத் எனும் உள்நாட்டிலேயே சென்னை ஐசிஎஃப் பேக்டரியில் தயார் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது இந்தியாவில் 34 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலானது நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் ஏசி சேர் காரில் உணவுக்கு 364 ரூபாய் உட்பட 1,665 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்பு பெட்டியில் உணவுக்கு 419 ரூபாய் உட்பட 3,055 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
ஒரு வேளை உணவு வேண்டாமென்றால் No food என்ற option ஐ தேர்வு செய்ய வேண்டும். வைகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயிலை ஒப்பிடுகையில் வந்தே பாரத் ரயில் கட்டணம் பன்மடங்கு உள்ளது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வந்தே பாரத் ரயிலை பயன்படுத்துவார்களா என்ற சந்தேகம் இருக்கிறது.
இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயண நேரம் குறைவு என்பதால் பலர் இதில் பயணிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வந்தே பாரத் ரயிலின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் பயணிகள் அதிகளவில் வர வேண்டும் என்பதற்காக மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களான வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை உள்ளிட்ட ரயில்களின் வேகத்தை குறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது போல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை முதல் மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் முன்னதாகவே சென்னையிலிருந்து புறப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில் வந்தே பாரத் ரயிலில் அவ்வளவு கட்டணம் கொடுத்து ஏழை மக்களால் செல்ல முடியாது.
பேருந்தில் கூட எங்களால் கட்டணம் செலுத்த முடியாது என்பதால்தான் ரயிலில் குறைந்த கட்டணத்தில் ஊர்களுக்கு செல்கிறோம். தற்போது வந்தே பாரத்துக்காக இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைப்பது என்ன நியாயம் என்கிறார்கள். ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான் வைகை எக்ஸ்பிரஸ் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications