சினிமா “பைரசி” தெரியும்.. சினிமா ரிவியூக்கே பைரசி தெரியுமா? ப்ளூ சட்டை மாறனுக்கு நடந்த கொடுமை
சென்னை: பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் யூடியூப் சேனல் போன்றே போலியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி போலி ரிவ்யூ வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டு வருகிறார்கள்.
முன்பெல்லாம் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதற்கு முன், நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமா விமர்சனங்களை பார்த்து மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை பற்றி முடிவு செய்வார்கள்.
ஆனால், இணையதளம் வளர்ந்த பிறகு யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களும் யூடியூபில் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பார்த்து படம் பார்க்கத் தொடங்கினர்.

ப்ளூ சட்டை மாறன்
இப்படி யூடியூபில் தமிழ் சினிமாக்களை விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் சென்றுவிட்டாலும், குறிப்பிட்ட சிலருடைய சேனல்களை மட்டுமே மக்கள் அதிகம் பின்பற்றி வருகின்றனர். அவர்களில் முதன்மையானவர் ப்ளூ சட்டை என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் மாறன். தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை பல திரைப்படங்களுக்கு விமர்சனங்களை வழங்கி வருகிறார் இவர்.

எதிர்மறை விமர்சனம்
மாறன் விமர்சனம் செய்யும் பாணியின் காரணமாகவே பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எப்போது நீல நிற சட்டை அணிந்துகொண்டே சினிமாவுக்கு விமர்சனம் செய்து வந்ததால் ப்ளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படுகிறார். இவர் அளிக்கும் பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்மறையாகவே இருக்கும். தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களுக்கு கூட இவர் நெகட்டிவ் விமர்சனங்களை அளித்து இருக்கிறார்.

புகார்கள்
நடிகர்கள் விஜய், அஜித், ரஜினி, கமல் இயக்குநர்கள் மணிரத்னம், சங்கர், பார்த்திபன் என பல பெரிய சினிமா பிரபலங்களின் படங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இவராலேயே பல படங்கள் ஓடவில்லை என்று கூறி தயாரிப்பாளர்கள் காவல் நிலையத்தில் கூட புகாரளித்துள்ளனர். ஒரு கட்டத்தில் நானும் படம் எடுக்கிறேன் என்று சொல்லி ஆன்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார் ப்ளூ சட்டை மாறன்.

போலி சேனல்
ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து தமிழ் சினிமாக்களுக்கு விமர்சனம் செய்த பிரபலங்களை அதிர்ச்சியடைய வைக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள் போலிகள் சிலர். அவர் நடத்தி வரும் Tamil Talkies என்ற யூடியூப் சேனலை போன்றே அவரது லோகோவை பயன்படுத்தி Tamil Talkies delected reviews 1M என்ற பெயரில் புதிய சேனலை தொடங்கி போலியான விமர்சன வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

14 வீடியோக்கள்
கடந்த ஜூலை 27 ஆம் தேதி இந்த சேனலை தொடங்கி முதல் முதலில் தனுஷ் நடித்த தி கிரே மேன் படத்தின் விமர்சன வீடியோ தொடங்கி சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது வரை வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இதுவரை 14 வீடியோக்கள் அந்த சேனலில் பதிவிடப்பட்டு இருக்கின்றன. இதில் வெளியான கோப்ரா போலி விமர்சன வீடியோவை 84 ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள்.

எடிட் செய்த வீடியோக்கள்
ப்ளூ சட்டை மாறன் வெளியிடும் வீடியோக்களை டவுன்லோட் செய்து வெளியிடுகிறார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. அவர் விமர்சனத்துக்கு முன் வெளியிடும் விளம்பர வீடியோவை முழுமையாக ஓடவிட்டு அத்துடன் அவரது முந்தைய வேறு சில விமர்சன வீடியோக்களை துண்டு துண்டாக வெட்டி ஒட்டி எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால், இதையும் உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications