தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
சென்னை: தென் சென்னை தொகுதியில் திமுக கள்ள ஒட்டு போடப்பட்டதாக பாஜக புகார் அளித்துள்ளது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுக பதிலுக்கு பாஜக மீது பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இந்த முறை 72% வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது.

சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் கடந்த 1980க்கு பிறகு அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளது. குறிப்பாகத் தென் சென்னையில் கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் 10% வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
கள்ள ஓட்டுப் புகார்: இதற்கிடையே இந்த தென் சென்னை தொகுதியில் தான் கள்ள ஒட்டு போடப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. தென் சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடப்பட்டதாக அதிமுக மற்றும் பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். தங்கள் பூத் ஏஜெண்டை திமுகவினர் தாக்கியதாகவும் இங்கே மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. அதிமுகவைச் சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். கள்ள ஓட்டுப் போட்டு திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் போராட்டமும் நடத்தினர்.
பாஜக: இது தொடர்பாக பாஜகவின் கரு நாகராஜன் கூறுகையில், "இங்கே ஆசிரியர் நகர் 13ஆவது பூத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்தது. இங்கே வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் சுமார் 150 பேர் வந்துள்ளனர். அவர்களில் 50க்கும் மேற்பட்டோர் கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். உள்ளே இருந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஏஜெண்டுகளையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இந்த எல்லா சம்பமும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளது. அவர்கள் எந்தவொரு நடவடிக்கை இல்லை. இந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர் திமுக நிர்வாகிகள் தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான புகாரை அளித்ததுள்ளோம். நாளை இந்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளோம். சென்னையிலேயே இந்த நிலை என்றால் தமிழகத்தில் இருக்கும் மற்ற கிராமங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்..
எண்ண விட மாட்டோம்: வாக்குப்பதிவு முடிந்த உடன் இயந்திரங்களைச் சீல் வைக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் சீல் வைக்காமல் இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த பகுதியில் நிச்சயம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இந்த 13ஆம் எண் பெட்டியை வாக்கு எண்ணிக்கையின் போது நிச்சயம் எண்ண விட மாட்டோம். இதை மாநில தலைவர் அண்ணாமலையிடம் எடுத்துச் செல்வோம். மேலும் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.
திமுக விளக்கம்: இதற்கிடையே திமுக எம்எல்ஏ மயிலை வேலு இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர், "இது ஆதி திராவிடர் அதிகம் வசிக்கும் பகுதி.. இங்கே திமுகவுக்கு எப்போதும் ஆதரவு அதிகம். இப்பகுதியில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் திமுகவுக்குத் தான். இது பாஜகவில் உள்ள கராத்தே தியாகராஜன் நன்றாகவே தெரியும். எனவே, வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வேண்டும் என்றே பிரச்சினை செய்துள்ளார். கராத்தே தியாகராஜன் தான் ரவுடிகளுடன் நுழையப் பார்த்துள்ளார். அதை உள்ளே இருந்த திமுகவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது உள்ளே இருந்த பாஜகவினர் சாதி ரீதியாகப் பேசியுள்ளனர். இந்த தகவல் அருகே உள்ள பகுதிகளுக்குப் பரவ அவர்கள் இங்கே திரண்டதால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் திசை திருப்ப தோல்வி பயத்தில் இப்படி நடந்துக்குறாங்க. கள்ள வாக்கு என்றெல்லாம் பொய் சொல்கிறார்கள். சாதிப் பெயரைச் சொல்லிப் பேசியதே இந்த பிரச்சினைக்குக் காரணம். திமுக தரப்பிலும் நாங்கள் புகார் அளித்துள்ளோம். குற்றச்சாட்டுகளை முதலில் நிரூபிக்கட்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications