எல்லாருமே செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பிடலாமா? ரத்த சிவப்பணு பாதிப்புடையவர்? மத்திய அரசு குட் நியூஸ்
சென்னை: ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வரும்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய உணவு அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
நம் நாட்டில் பெண்கள், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு பரவலாக நிலவுகிறது. எனவே, மத்திய அரசு, உடலில் வைட்டமின் பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே செயற்கை ஊட்டமேற்றிய உணவில் தீவிரம் காட்டி வருகிறது.. செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்த முனைப்பு காட்டியது.

ஊட்டச்சத்துக்கள்: இந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்பது, வழக்கமான அரிசியை போலவே இருக்கும்.. மற்ற அரிசிகளிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இதிலும் சேர்க்கப்படுகின்றன... அதாவது, அரிசியை மாவாக அரைத்து, இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் B 12 போன்ற சத்துக்கள் இதில் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.
அரிசி செறிவூட்டல் முறையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான FSSAI பரிந்துரைத்த தரத்தின்படி, இவ்வாறு சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.. பின்னர், இவை அரிசி வடிவில் மாற்றப்பட்டு, 100 கிலோவுக்கு, 1 கிலோ என்ற விகிதத்தில் புழுங்கல், பச்சரிசியுடன் கலந்து வழங்கப்படுகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி: அந்தவகையில், இந்தியா முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்தந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த அரிசிக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைக்கவில்லை.. காரணம், தானியங்களில் இரும்புச்சத்தை செறிவூட்டுவது உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பை கணிசமாக அதிகரிக்க செய்யும் என்றும், ஹீமோகுளோபின் அளவினையும் இது உயர்த்தாது, குடலில் நல்ல நுண்ணுயிரிகளை அழித்து பாக்டீரிய தொற்று ஏற்ட வாய்ப்புள்ளது, உடலில் இரும்புச்சத்து அதிகரித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம், உயர் ரத்த அழுத்தமும் வரலாம்" என்றெல்லாம் பல்வேறு எதிர்மறை தகவல்கள் கசிந்தவாறே உள்ளன.
ரத்தசோகை: இப்படிப்பட்ட சூழலில்தான், மத்திய அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில், "செறிவூட்டப்பட்ட அரிசியை, தலசீமியா எனப்படும், மரபணு சார்ந்த ரத்த சோகை போன்ற உடல் நல குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது" என்ற விழிப்புணர்வு வாசகத்தை, அந்த அரிசி உள்ள சாக்கு பையில் அச்சிடுமாறு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில் சில ரேஷன் கடைகளில், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.. அதேபோல, பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின்கீழும், இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க போவதாக தெரிகிறது. இந்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய உணவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
உட்கொள்ளலாம்: "தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட ரத்த சிவப்பணு பாதிப்புடைய நபர்கள் உட்பட அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்ளலாம்; பாதுகாப்பானது. இதை, அறிவியல் சான்றுகளும் உறுதி செய்கின்றன. உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018ன்படி, முன்பு செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில், தலசீமியா மற்றும் ரத்த சோகை இருப்பவர்களுக்கு சுகாதார "எச்சரிக்கை வாசகங்கள்" இடம் பெற்றிருந்தன.
பிற நாடுகளில் இது போல் எச்சரிக்கை வாசகங்கள் இல்லாததை சுட்டிக்காட்டி அறிவியல் குழு கேள்வி எழுப்பியது. அதன் பிறகு, உணவு மற்றும் பொது வினியோகத் துறை ஒரு குழுவை அமைத்து, ஹீமோகுளோபினோபதி பாதிப்பு உள்ளவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி பாதுகாப்பானதா? என ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
கூடும் நம்பிக்கை: அவர்கள் அளித்த அறிவியல் சான்றுகள்படி, செறிவூட்டப்பட்ட அரிசி தலசீமியா மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு எந்த உடல்நலப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது உறுதியானது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications