காஞ்சிபுரம் கல்லூரியில் ஆந்திர மாணவி விபரீத முடிவு.. 3 நாள் கழித்து உடலை பார்த்து மாணவர்கள் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் அருகே உள்ள எஸ்.சி.எஸ்.வி.எம்.வி. (SCSVMV) பல்கலைக்கழக விடுதியில், ஆந்திராவைச் சேர்ந்த 19 வயது மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தையடுத்து, மாணவர்கள் நள்ளிரவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்தியாலயா (சங்கரா கல்லூரி) விடுதியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிகிதா என்ற மாணவி 3 நாட்களுக்கு முன்பு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு மாணவியின் உடல் மீட்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kanchipuram collage student

காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இங்குள்ள விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

இந்நிலையில், விடுதி அறையில் தங்கியிருந்த மாணவி நிகிதா, பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி 3 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும், அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை. மாணவி இறந்து 3 நாட்கள் கடந்த நிலையில் உடல் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும், நடந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்றிரவு போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானம் செய்ய முயன்றபோது, சில மாணவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதனிடையே, நியாயம் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளில் 10 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் முழுமையான விசாரணைக்குப் பிறகே உரிய விளக்கம் அளிக்க முடியும் என்பதால், கல்லூரியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது; தகுந்த ஆலோசனையும் ஆதரவும் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும். உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ மன அழுத்தமோ அல்லது சுய தீங்கு எண்ணங்களோ ஏற்பட்டால், உடனடியாகக் கீழே உள்ள இலவச உதவி எண்களைத் தொடர்பு கொண்டு பேசலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் : +91 44 2464 0050 (24 மணி நேரமும் செயல்படும்)

தொலை-மானஸ் - இந்திய அரசின் மனநல சேவை: கட்டணமில்லா எண்: 14416 அல்லது 1800-891-4416 (24x7 சேவை)

மாநில மனநல உதவி எண் (தமிழ்நாடு அரசு): எண்: 104

வந்தேவாலா பவுண்டேஷன் : +91 9999 666 555

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+