தன்னிச்சையாக செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்! முரண்பட்ட 2 ஆணையர்கள்! அம்பலமான மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினட் செயலாளருக்கு இவர்கள் அனுப்பிய 14 கடிதங்களை ஆய்வு செய்ததில் இந்த மோதல் அம்பலமாகி உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

election eci

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நடத்திய புலனாய்வு விசாரணையில், கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக குறைந்தபட்சம் 14 முறை தங்கள் எதிர்ப்பு கடிதங்களை பதிவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. ஒரே நாளில் மட்டும் 4 முறை ஆட்சேபனை கடிதங்கள் அனுப்பப்பட்ட சம்பவங்களும் இதில் அடங்கும்.

வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' (Special Intensive Revision - SIR) நடவடிக்கைகளில் தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், தங்கள் ஆலோசனைகளை மீறி சட்டவிரோதமான நடைமுறைகள் புகுத்தப்படுவதாகவும் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

13 கோடி வாக்காளர்கள் நீக்கம்: வெடித்த விவாதம்

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பீகாரில் தொடங்கப்பட்ட இந்த தீவிர வாக்காளர் திருத்தப் பணி (SIR), பிறகு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. பொதுவாக வாக்காளர் பட்டியலில் உள்ள போலிப் பெயர்கள், இறந்தவர்கள் மற்றும் ஊர் மாறிச் சென்றவர்களின் பெயர்களை நீக்குவது வழக்கம். ஆனால், இந்த நடவடிக்கையின் மூலம் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் யார் வாக்களிக்க வேண்டும், யார் வாக்களிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம், இத்தனை கோடி பெயர்களை நீக்கியது நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த ஒட்டுமொத்தப் பணியும் மூன்று ஆணையர்களின் மேற்பார்வையில் நடப்பதாக வெளியே காட்டப்பட்டாலும், ஆணையத்தின் உள்ளே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எடுக்கும் முடிவுகளுக்கு மற்ற இரண்டு ஆணையர்களான சாந்து மற்றும் ஜோஷி ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பு மற்றும் 2023 சட்டம் சொல்வது என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரும், இரண்டு தேர்தல் ஆணையர்களும் இருப்பார்கள். சட்டப்படி மூவருமே சமமான அந்தஸ்து கொண்டவர்கள்.. தலைமைத் தேர்தல் ஆணையர் என்பவர் சமமான பவர் கொண்டவர்களில் முதன்மையானவர் மட்டுமே தவிர, தனிச்சையாக சர்வாதிகார முடிவுகளை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது.

2023 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தின் பிரிவு 18-ன் படி:

1. ஆணையத்தின் அனைத்து அலுவல்சார் நடவடிக்கைகளும், முடிவுகளும் முடிந்தவரை ஒருமனதாகவே எடுக்கப்பட வேண்டும்.

2. ஒருவேளை கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.

3. ஆணையத்தின் செயல்பாட்டு விதிகள் மற்றும் வேலைப் பகிர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என்றாலும், அதற்கு மூன்று ஆணையர்களின் ஒருமனதான ஒப்புதல் அவசியம்.

ஆனால், இந்த விதிகள் மீறப்படுவதாக ஏப்ரல் 16 அன்று சுக்பீர் சிங் சாந்து அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். அதில், தேர்தல் ஆணையத்தின் 3 அதிகாரிகளின் ஒருமித்த ஒப்புதல் இன்றியே பல சுற்றறிக்கைகளும் உத்தரவுகளும் ஆணையத்தின் பெயரில் வெளியிடப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். அடுத்த எட்டு நாட்களில், ஏப்ரல் 24 அன்று விவேக் ஜோஷியும் இதே விவகாரத்தை எழுப்பி, அரசியலமைப்புப் பிரிவு 324 மற்றும் 2023 சட்ட விதிகளின்படி ஆணையத்தின் முழு ஒப்புதல் இல்லாமல் எந்த அறிவிப்பும் வெளியாகக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.

இரண்டு ஆணையர்கள் எழுப்பிய 4 முக்கியப் புகார்கள்

ஆணையர்கள் சாந்து மற்றும் ஜோஷி எழுப்பிய 14 ஆட்சேபனைகளும் தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான நான்கு அடிப்படைப் பணிகளை மையமாகக் கொண்டுள்ளன.

1. புதிய வாக்காளர் யார்? பாரம் 6 திடீரென மாற்றப்பட்டது ஏன்?

18 வயது நிரம்பிய எந்தவொரு இந்தியக் குடிமகனும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 'பாரம் 6' என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 2026 ஜூலை மாதம் இந்த விண்ணப்பத்தில் புதிய கேள்வி ஒன்று சேர்க்கப்பட்டது.

அதில், "விண்ணப்பதாரர் அல்லது அவர்களுடைய பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியின் பெயர் முந்தைய தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் பதிவேட்டில் உள்ளதா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் எந்தப் புதிய வாக்காளரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது என்ற நிலை உருவானது.

இந்த மாற்றத்திற்கு முன்பாகவே, மே மாதத்தில் விவேக் ஜோஷி தனது குறிப்பில், "மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தாமல் பாரம் 6-ல் இப்படி ஒரு புதிய நிபந்தனையையோ மாற்றத்தையோ கொண்டுவர முடியாது" என்று எச்சரித்திருந்தார். இதற்கு சாந்துவும் ஆதரவு தெரிவித்தார்.

இரு ஆணையர்களின் எச்சரிக்கையையும் மீறி இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜூலை மாதம் ஊடகங்களில் செய்தி வெளியானதும், ஆகஸ்ட் 13 அன்று சாந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்த மாற்றம் "அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது மற்றும் சட்டவிரோதமானது" என்றும், அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனாலும் அந்த எதிர்ப்பு ஏற்கப்படவில்லை.

2. வாக்காளர் பட்டியல் தகவல்களைக் கட்டுப்படுத்துவது யார்?

தேர்தல் முறைகேடுகள், வாக்காளர் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் தேர்தல் ஆணையம் முன்வைக்கும் முக்கிய வாதம்.. "வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது டெல்லியில் நடக்க கூடியது அல்ல.. அது உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்படுகிறது... என்பதே. ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பதிவு அதிகாரியாக (வழக்கமாக சப்-டிவிஷனல் மேஜிஸ்திரேட் அல்லது வருவாய் கோட்டாட்சியர்) உள்ளூர் அதிகாரியே இருப்பார். இவர்கள்தான் 'ERONet' மற்றும் அதன் புதிய வடிவமான 'ECINet' மென்பொருள் வழியாக வாக்காளர் பட்டியலைக் கையாள்வார்கள்.

ஆனால், இப்போது தலைமை தேர்தல் ஆணையர் மூலம் உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் தகவல் தொகுப்பு முழுவதும் டெல்லி தலைமையகத்தில் மையப்படுத்தப்படுவதாக மே மாதத்தில் விவேக் ஜோஷி எச்சரித்தார்.

உரிய சட்டப்பூர்வ அதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் வாக்காளர் தரவுகளில் மாற்றம் செய்யும் அதிகாரம் இல்லை என்பதை உறுதிப்படுத்த தணிக்கை நடத்த வேண்டும் என்றார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒருவரின் பெயர் டெல்லியில் உள்ள அதிகாரி மூலம் நீக்கப்பட முடியும்.

ஆகஸ்ட் மாதத்தில் சாந்துவும் இதையே சுட்டிக்காட்டினார். மாநில அளவிலான அதிகாரிகளுக்கு ERONet தளத்தில் முழுமையான அனுமதியும் சுதந்திரமும் மறுக்கப்படுவதாகப் புகார்கள் வருவதாகவும், சட்டப்பூர்வ கள அதிகாரிகளின் உரிமைகளைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் (DG-IT) சீமா கன்னாவுக்கு எந்தச் சட்ட உரிமையும் இல்லை என்றும் அவர் வெளிப்படையாகக் கண்டித்தார்.

பல ஆண்டுகளாக உள்ளூர் அதிகாரிகள் பார்த்த பணிகளின் அதிகாரம் அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு உள்ளது.

3. மேற்கு வங்கம்: மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டது யார்?

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்குள்ள 294 தொகுதிகளில் 49 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது.

பெயர்கள் நீக்கப்பட்ட விதம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு, பிப்ரவரி 2026-ல் 60 லட்சம் வாக்காளர்களின் சந்தேகப் பட்டியலை ஆய்வு செய்யும் பணியை உச்ச நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதன்பின்னர் 27 லட்சம் வாக்காளர்களை ஆணையம் நீக்கியது. இதனை எதிர்த்து முறையிட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயங்களை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

கடந்த வாரம் இந்த தீர்ப்பாயங்களில் 38 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தது. இதில் 22.21 லட்சம் மனுக்கள், நீக்கப்பட்ட வாக்காளர்களால் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டவை.

கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

ஆனால், மீதமுள்ள 16.10 லட்சம் மனுக்கள், நீதித்துறை அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட தகுதியான வாக்காளர்களுக்கு எதிராக, அவர்களைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டவை. இந்த மனுவை தாக்கல் செய்ததே தேர்தல் ஆணையம்தான்.

மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் பெயரில் மேல்முறையீடு செய்தது யார் என்ற கேள்வி எழுந்தது. ஆகஸ்ட் மாதம் சாந்து அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், "தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்த மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்ய யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது? உண்மையில் இவற்றைத் தாக்கல் செய்தது யார்?" என்று கேள்வி எழுப்பினார். தனக்கோ, சக ஆணையர் ஜோஷிக்கோ அல்லது மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கோ கூட இந்த மேல்முறையீடுகள் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று சாந்து ஆவணப்படுத்தினார்.

4. கோவா: தகுதியான வாக்காளர்களைப் புறக்கணித்த மென்பொருள்

வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்ய வாக்காளர்களுக்கு போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவும், விசாரணைக்கு ஆஜராகவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஜனவரி 29 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கோவாவில் கள அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆவணங்கள் சரியாக இருந்த 97 வாக்காளர்களை இறுதிப் பட்டியலில் சேர்க்கத் தகுதியானவர்கள் என முடிவு செய்தனர்.

ஆனால், ஏற்கனவே நீக்கப்பட்ட பெயர்களை மென்பொருளில் மீண்டும் அனுமதிப்பதற்கான 'ரோல்பேக்' வசதி அந்தத் தளத்தில் கள அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை. பிப்ரவரி 11 முதல் 17 வரை, கோவா தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், பொறுப்பு துணை தேர்தல் ஆணையர் ஞானேஷ் பாரதி மற்றும் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் சீமா கன்னா ஆகியோருக்கு 8 முறை மின்னஞ்சல் அனுப்பி இந்த வசதியை இயக்கித் தருமாறு கோரியது.

ஆனால் இறுதிப் பட்டியல் வெளியாகும் வரை தலைமை அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை; அந்தத் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும், கள அதிகாரிகள் தகுதி என உறுதி செய்தும், அந்த 97 வாக்காளர்களின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டன. எண்ணிக்கை 97 மட்டுமே என்றாலும், ஒரு தகுதியான வாக்காளரின் வாக்குரிமை கூட மறுக்கப்படக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் கடமை இங்கே கேள்விக்குள்ளானது.

மத்திய அமைச்சரவைச் செயலாளருக்குப் பறந்த கடிதங்கள்

விவகாரம் முற்றிப்போன நிலையில், வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி இருவரும் மத்திய அமைச்சரவைச் செயலாளருக்குத் தனித்தனியாகக் கடிதங்களை எழுதினர். ஆனால் இதற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் சரியான பதிலை அளிக்கவில்லை.

இந்தக் கடுமையான மோதல்களுக்குப் பிறகு, செப்டம்பர் 9 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் கலந்துகொண்ட முழுக் கூட்டம் நடைபெற்றது. நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் முழுமையான கூட்டம் இதுவாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட மூன்று தேர்தல் ஆணையர்களில், பெரும்பான்மையான இரண்டு ஆணையர்களின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டு, தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டு வந்ததாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை மீது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளன. தேர்தல் ஆணைய வட்டாரங்கள் அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டு வருவதாக வெளியே செய்திகள் வந்தாலும்.. அவை எல்லாம் பொய் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த கடிதங்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் ஆல் இஸ் நாட் வெல் என்பது தெரிய வந்துள்ளது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+