திமுக அமைச்சர்களுடன் தொடர்பு- திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இறுதி வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் ஆளும் அமைச்சர்களுடன் திருச்ச்சி மாவட்ட அதிமுகவினர் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது; திருச்சி மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அண்மையில் அதிமுகவின் 82 கட்சி மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இந்த 82 மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று நடைபெற்றது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்தக் கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் யாருடன் கூட்டணி என்பது குறித்து எந்த சூழ்நிலையிலும் கருத்து தெரிவிக்காமல் இருக்க வேண்டும்; அனைத்து பூத்துகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்.
ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் பிரசாரங்களை முன்னெடுக்க் வேண்டும்; அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கோஷ்டி பூசல் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது, திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் தற்போதைய திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்; அவர்கள் அனைவரும் இந்த கூட்டம் முடியும் போதே அந்த தொடர்புகளை எல்லாம் மறந்துவிட வேண்டும்; கடந்த காலங்களில் திருச்சி மாவட்டம் அண்ணா திமுகவின் கோட்டையாக இருந்தது. அதே நிலைமையை வரும் சட்டசபை தேர்தலில் உருவாக்க வேண்டும். இதற்காக திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றியாக வேண்டும்; அப்படி செயல்படாத கட்சி நிர்வாகிகள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எடப்பாடி பழனிசாமி கூட்டிய இன்றய ஆலோசனைக் கூட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அதிமுகவில் கலகக் குரல் எழுப்பி வரும் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையனும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications