ரம்ஜான் தினத்தில் நடிகை ஷாலு ஷம்முவிற்கு வந்த மர்ம பார்சல்.. திறந்து பார்த்தால் மாயமான ஐபோன்!
சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் மாயமான ஆப்பிள் ஐபோன் உணவு டெலிவரி பார்சலில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். போன் மாயமானதில் நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ஷாலு கூறியிருந்த நிலையில் தற்போது பார்சலில் போன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசிப்பவர் திரைப்பட நடிகை ஷாலு ஷம்மு. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ரூ 2 லட்சம் கொடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாங்கியிருந்தார். இந்த நிலையில் எம்ஆர்சி நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடிகை ஷாலு ஷம்மு தனது நண்பர்களுடன் கடந்த 9ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை பார்ட்டிக்கு சென்றிருந்தார். அப்போது பார்ட்டி முடிந்ததும் நளளிரவு 2 மணிக்கு தனது நண்பர்களுடன் சூளைமேட்டில் உள்ள அவருடைய தோழியின் வீட்டில் தங்கியுள்ளார்.

அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த போது தனது ஐபோனை காணவில்லை. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற போது அங்கும் அவருடைய செல்போன் இல்லை. அவர் வைத்திருந்த போன் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகும். இதன் விலை ரூ 2 லட்சம். தனது நண்பர்கள்தான் போனை எடுத்திருப்பர் என பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்திடம் இருந்து பார்சல் ஒன்று வந்துள்ளது. தான் எந்த பார்சலையும் ஆர்டர் செய்யவில்லை என ஷாலு ஷம்மு கூறினாராம். ஆனால் ஊழியரோ உங்கள் பெயருக்குத்தான் வந்துள்ளது என கூறினாராம். இதையடுத்து அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்துள்ளார்.
அப்போது காணாமல் போன அவரது ஐபோன் அதில் இருந்ததால் அதை கண்டு மகிழ்ச்சி அடைந்தாராம். இந்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் ஐபோனை யார் திருடியதாக சந்தேகப்பட்டேனோ அது உறுதியாகிவிட்டது. 8 வருட நட்பு வீணானது. இனி யாரை நம்புவது எனத் தெரியவில்லை என ஷாலு ஷம்மு குறிப்பிட்டுள்ளார். இவர் சொல்வதை வைத்து பார்த்தால் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து ஷாலுவின் ஐபோனை திருடிய நண்பரே அவருக்கு பார்சல் அனுப்பி வைத்துள்ளது தெரிகிறது.












Click it and Unblock the Notifications