லஞ்சம் கொடுத்ததாக சொன்ன விவகாரம்.. 2 நாட்களில் பேச்சை மாற்றிய அமைச்சர் மரிய வில்சன்!
சென்னை: தமிழக சட்டசபையில், "கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் கட்டாயப்படுத்தி பணம் பெற்றனர்" என தான் பேசியது "லஞ்சம் வாங்கினார்கள் என்கிற அர்த்தம் அல்ல" என நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் திங்கட்கிழமை அன்று பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், "கடந்த ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். கட்டாயப்படுத்தி பணம் வாங்கினார்கள். இந்த விஷயத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். பேரவையில் சாட்சி சாட்சி என்று கேட்கிறார்கள். ஆவண சாட்சி வந்துவிட்டுப் போகட்டும். பள்ளிகளில் பணம் வசூலிக்கப்பட்ட தால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் நானே ஒரு சாட்சிதான்.

சட்டசபையில் பேசிய மரிய வில்சன்
இதுகுறித்து பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால், வேறு வழியில்லை. இந்த விவகாரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும். நாளைக்கு வேண்டுமானால் அவர்கள் அவதூறு வழக்கு தொடுக்கட்டும். அல்லது விசாரணைக்கு அழைக்கட்டும். நானே வருகிறேன். எந்த இடத்தில், எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதை என்னாலேயே தெளிவாக சொல்ல முடியும். இதுதான் சாட்சி. நானே சாட்சி" என்றார்.
நிதி அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஒரு அமைச்சராகப் பொறுப்பு வகித்துக்கொண்டு நானே லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவது தவறானது. தான் லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அமைச்சர் மீதுதான் முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து நிச்சயமாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளிப்போம். உடனடியாக அந்த அமைச்சரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
மரிய வில்சன் பேட்டி
இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்துக்கு பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருக்கும் நிதி அமைச்சர் மரிய வில்சன், கடலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "சட்டசபையில் லஞ்சம் கொடுத்ததாக பேசினீர்களே? லஞ்சம் கொடுத்ததே தவறு தானே" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், "நான் வந்து ஒரு சாட்சியாகத்தான் இருந்துருக்கேன். நான் விட்னஸ், அது வந்து லஞ்சம் எனச் சொல்லவில்லை. அவங்க கட்டாயப்படுத்தி இருக்காங்க. அதாவது ஒரு ப்ராப்பரா டாக்குமெண்ட்ஸ் இருக்கப் பார்த்து டிலே பண்றாங்க இல்லையா? ப்ராப்பர் டாக்குமெண்ட்ஸ்லாம் கொடுப்போம் இல்லையா? அது டிலே பண்ணதனால அந்த கன்சார்ட்டியம் ஆஃப் ஸ்கூல்ஸ், கன்சார்ட்டியம் ஆஃப் காலேஜஸ் ட்ரீட் பண்ணதை நான் ரெப்ரசென்ட் பண்ணிருக்கேன். அவ்வளவுதான்" என விளக்கம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
