"ரகசியம்".. திருச்சி சிவா மகன் "சூர்யா"வின் முதல் அசைன்மென்ட்டே இதுதானாமே.. அப்ப அவ்ளோதானா?
திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு முதல் அசைன்மென்ட் தற்போது தரப்பட்டுள்ளதாம்
சென்னை: பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கு, முதல் அசைன்மென்ட்டை மேலிடம் தந்துள்ளதாகவும், இதையடுத்து, சூர்யா பாஜகவில் பிஸியாகிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன..
திமுகவின் டெல்லி முகம் என்று ஃபேமஸ் ஆனவர் திருச்சி சிவா.. கருணாநிதி காலத்தில் இருந்தே மிக முக்கிய புள்ளியாக கட்சிக்குள் வலம் வருபவர்.. அதேசமயம் திடீர் திடீரென பரபரப்பை அவ்வப்போது ஏற்படுத்தி கொண்டிருப்பவரும்கூட.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு இவரது மகன் பாஜகவில் இணைந்தது மிக முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது.. பலருக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மருமகள்
அதைவிட முக்கியம், மகனும் மருமகளும், திருச்சி சிவா பற்றி புகார் தந்ததுதான்.. "கொள்கையெல்லாம் மேடையில்தான்... வீட்டில் இல்லை.." என்பன போன்ற புகார்கள் சூர்யா தரப்பில் இருந்தே வெடித்தன.. இதனால் அப்பா - மகன் இடையே சரியான உறவமுறை இல்லை என்றபோதிலும், தன் மனைவியுடன் தனியாகத்தான் சூர்யா வசித்துவந்தார் என்றபோதிலும், இதை பாஜக சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. அதேபோல, இவரும் பாஜகவுக்கு செல்வார் என்று யாராலுமே முன்னதாக கணிக்கவும் முடியவில்லை.

அன்பில்மகேஷ் - நேரு
திருச்சியை திமுகவை பொறுத்தவரையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இருவருமே வலுவாக இருப்பதால், திருச்சி சிவா இரண்டாம் கட்ட தலைவராக கருதப்படுவதாக தெரிகிறது.. இதற்கு காரணம், அவர் எப்போதுமே டெல்லி விவகாரத்தை கவனித்து கொள்வதில் முதன்மையாக உள்ளதால், நேரு, அன்பில்மகேஷ் முதன்மைப்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள். எனவே, வாரிசுகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்பதாலேயே, பாஜக பக்கம் சூர்யா காய் நகர்த்தியதாக காரணம் சொல்லப்பட்டது.

விபி துரைசாமி
விபி துரைசாமியும், கரு.நாகராஜனும், சூர்யாவின் பாஜக இணைப்பிற்கு பின்னணியில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், எந்த கட்சி பொறுப்பில் இல்லாத சூர்யாவின் இணைப்பை, ஒரு சாதனையாகவே கருதி பாஜக பெருமைப்பட்டுக் கொண்டது... கட்சியில் யார் சேர்ந்தாலும், பாஜக முக்கிய பொறுப்பும், பதவியும் தந்து அழகுபார்க்கும் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், சூர்யாவுக்கும் அதுபோலவே, பதவியும், அசைன்மென்ட்டும் தரப்பட்டுள்ளதாம்.

அட்ராசிட்டிகள்
இவர் கட்சியில் சேர்ந்த புதிதிலேயே அதுவென்றால், வேறு ஒரு அசைன்மென்ட் தரப்பட்டதாக பரபரக்கப்பட்டது.. அதாவது திமுகவில் உள்ள வாரிசு பிரமுகர்களின் அட்ராசிட்டியை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதானாம் அது.. இதனால், இத்தனை காலமும் சூர்யாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உட்பட பலரும் கதிகலங்கி போயிருப்பதாகவும் கூறப்பட்டது.. இப்போது விஷயம் என்னவென்றால், ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக சூர்யாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்தபோதே, மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாம். இப்போது அதற்கான அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது.

புளகாங்கிதம் அடைந்த பாஜக
இந்த பதவி அறிவிப்புக்கு பின்னாலும், பாஜகவுக்கு ஒரு கணக்கு இருக்கிறது என்கிறார்கள்.. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகம் கிடைக்கவில்லை என்பதை, தமிழக பாஜக நன்றாக புரிந்து கொண்டுள்ளது.. எனவேதான், அந்த வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டுவர தீவிரமாக யோசிக்கப்பட்டு வந்தது.. அதன் ஒரு பகுதியாகவே, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சூர்யாவிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.

சூர்யா பதவி
முற்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் தவிர, மீதமுள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் பொதுவான பதவி இது என்றாலும்கூட, சூர்யாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கிய பணி என்பது முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை பாஜகவுக்கு ஆதரவாக திரட்டுவதுதான் என்கிறார்கள்... இந்த முறை, எம்பி தேர்தலை முன்வைத்து, அனைத்து சாதி வாக்குகளையும் பாஜக குறி வைத்து வரும் நிலையில், முக்குலத்தோர் வாக்குகளுக்கு பிரதான குறியை வைத்துள்ளது.

முதல் அசைன்மென்ட்
அதுமட்டுமல்ல, திராவிடக் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மக்கள் செல்வாக்கு மிக்க பிரமுகர்களை பாஜகவுக்கு கொண்டு வருவது, மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக திரட்டுவது என்பதுதான் சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பின் பின்னணி காரணமாம். தொடர்ந்து திமுகவை சூர்யா விமர்சித்து வரும் நிலையில், அவரை ஊக்கப்படுத்துவதற்காக இந்த பதவியை மேலிடம் தந்திருப்பதாகவே கருதப்படுகிறது.. தன்னுடைய முதல் அசைன்மென்ட்டை சூர்யா சிறப்பாக செய்து முடிப்பாரா? பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications