முதலில் நெடுஞ்சாலை பலகை, இப்போது மாத்திரை கவர்! தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்தி நுழைந்தது! ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா காலம் தொட்டே 'இருமொழிக் கொள்கை' என்பது மிகத் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வரும் அடிப்படை அடையாளம். அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்-நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சாலை பலகையில் திடீரென இந்தி எழுத்துகள் புகுத்தப்பட்டு, மக்கள் கொந்தளித்ததும் அதிகாரிகள் அதை அழித்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தரப்படும் மாத்திரைக் கவர்களிலேயே இந்தி இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மாத்திரைகள் போட்டுத் தரும் கவர்களில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் நேரம் மற்றும் குறிப்புகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது.

hindi karur vijay

என்ன நடந்தது? மாத்திரை கவரில் என்ன இருந்தது?

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை எளிய பொதுமக்களுக்கு, மருந்தகங்களில் மாத்திரைகளை பழுப்பு நிற கவரில் போட்டுக் கொடுப்பது வழக்கம். அதில் மாத்திரையை எப்போது உட்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்க 'காலை', 'மதியம்', 'இரவு' அல்லது 'உணவுக்கு முன்', 'உணவுக்குப் பின்' போன்ற விவரங்கள் இருக்கும்.

பொதுவாக தமிழக அரசு விதிகளின்படி இந்த விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் கரூர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து அட்டைகளில், இந்த இரண்டு மொழிகளோடு மூன்றாவதாக இந்தியிலும் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'எக்ஸ்' தளத்தில் புகைப்பட ஆதாரத்துடன் கேள்வி எழுப்பிய தி.மு.க

இந்த விவகாரத்தை தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரை கவரின் புகைப்படங்களை தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்த அவர், "தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை ரகசியமாக அமலுக்கு வந்துள்ளது போல! முதலில் கரூர், இப்போது கோவையிலும் அதே நிலைமை" என்று பதிவிட்டு ஆளும் தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.

அவரைத் தொடர்ந்து புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜாவும் தவெக அரசை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பினார்:

"மாநில நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகையில் தொடங்கி அரசு மாத்திரை கவர்கள் வரை இந்தியைத் திணிப்பதுதான் தவெக தலைவர் பேசிய 'மாற்றமா'? கரூர் அரசு மருத்துவமனையில் யாருடைய மனதை குளிரவைக்க இந்தி எழுத்துகள் அச்சிடப்பட்டன? முழுக்கை சட்டை அணிந்தால் டெங்கு போய்விடும் என்று முன்பு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், இப்போது மாத்திரை அட்டையில் இந்தி போட்டால் நோய்கள் குணமாகிவிடும் என்கிறாரா?"

மருத்துவமனை நிர்வாகங்களின் முரண்பட்ட விளக்கங்கள்

இந்த விவகாரம் காட்டுத்தீ போல் பரவி மக்களிடையே பெரும் கண்டன அலை உருவானதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகங்கள் பதற்றத்துடன் அந்த இந்தி கவர்களை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளன.

கரூர் மருத்துவமனை விளக்கம்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாரதி மோகன் கூறுகையில், "இந்த கவர்கள் கடந்த டிசம்பரில் அச்சிடப்பட்டவை. கவனக்குறைவாக இது விநியோகிக்கப்பட்டுவிட்டது. இனி இந்த கவர்களில் மருந்துகளை வழங்கக் கூடாது என உடனடியாக உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

கோவை மருத்துவமனை விளக்கம்:கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி (RMO) சரவணபிரியா, "வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் ஸ்பான்சர்கள் நிதி மூலம் சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் வழியாக அச்சிடப்படுகிறது. இந்த நடைமுறை பல மாதங்களாகவே இருந்து வருகிறது" என்று கூறினார். ஆனால் சர்ச்சை வெடித்ததும் கோவையிலும் இந்தி கவர்கள் உடனே திரும்பப் பெறப்பட்டு, தமிழ்-ஆங்கிலம் மட்டுமே உள்ள மாற்று கவர்கள் தரப்பட்டு வருகின்றன.

பாமர மக்கள் கேட்கும் எளிய கேள்விகள்: தவறு யாருடையது?

வடமாநிலத் தொழிலாளர்களின் வசதிக்காக என்று நிர்வாகம் சொன்னாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அடிப்படை மருத்துவ நிறுவனங்களில் எதன் அடிப்படையில் இந்தி நுழைந்தது என்ற கேள்வி எழுகிறது:

1. அரசுக்குத் தெரிந்து நடந்திருந்தால் - வெளிப்படையான கொள்கை துரோகம்:

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கும் போதெல்லாம் தமிழ் மக்கள் அதற்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள். அப்படியிருக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே தனது நெடுஞ்சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் இந்தியை அங்கீகரிப்பது அண்ணாவின் கொள்கைக்கும் தமிழகத்தின் இறையாண்மைக்கும் எதிரான பெரும் தவறாகும்.

2. அரசுக்குத் தெரியாமல் அதிகாரிகள் செய்தால் - நிர்வாகக் கோளாறு:

"அதிகாரிகள் தன்னிச்சையாகச் செய்தார்கள், அரசுக்குத் தெரியாது" என்ற வாதம் ஏற்கக்கூடியதல்ல. ஒரு துறையில் என்ன நடக்கிறது, பலகைகளில் என்ன எழுதப்படுகிறது, அரசு மருத்துவமனையில் என்ன மாதிரியான பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன என்பதைக் கூட கண்காணிக்க முடியாவிட்டால், அரசு இயந்திரத்தின் மீது முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் என்ன பிடி இருக்கிறது?

நெடுஞ்சாலை பலகை சர்ச்சையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தப்பித்த அரசு, இப்போது மருத்துவமனையிலும் அதே தவறைச் செய்துள்ளது. மக்கள் போராடி குரல் கொடுத்த பிறகே தவறுகளை சரிசெய்வது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. தமிழக மக்களின் மொழி உணர்விலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இருமொழிக் கொள்கையிலும் விளையாடுவதை விட்டுவிட்டு, அரசு நிர்வாகத்தில் இரும்புக்கரம் கொண்டு முழுமையான கண்காணிப்பைச் செலுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+