24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை.. தூள் கிளப்பும் அரசு! வரலாற்றிலேயே முதல்முறை: எங்கெங்கு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் ஆவின் பால் விற்பனை மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை. மழையால் உணவு கிடைக்காத நிலையில் பால் மட்டு்மே பசியைப் போக்கும் தீர்வாக இருந்தது. குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பால் தவிர்க்க முடியாத தேவையாக இருந்த நிலையில், பால் கிடைக்காமல் பலர் அவதிப்பட்டனர்.

ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், பால் திரும்ப கிடைக்காதோ என்ற அச்சத்தில் பலர், தேவைக்கு அதிகமாக பால் வாங்கி வைத்தனர். இதனால், மற்றவர்களுக்கு பால் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதெல்லாம், வெள்ள பாதிப்பு கடுமையாக நிலவிய 2 நாட்கள் தான். அதன் பிறகு, நிலைமை கட்டுக்குள் வந்தது.
வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு ஆவின் பால் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. அதனால் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பால் வினியோகத்தை சீரமைத்து தற்போது சிக்கல் இன்றி பால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் ஆவின்: இந்நிலையில், மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆவின் பால் விற்பனை மையங்கள் சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக வரலாற்றில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆவின் வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய கீழ்கண்ட ஆவின் பார்லர்கள் இன்று முதல் தேவைக்கேற்ப (சில நாட்கள்) 24 மணிநேரமும் செயல்படும். ஆவின் பால், பால் பவுடர் மற்றும் பால் உப பொருள்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
8 மையங்கள்: 24 மணி நேரமும் செயல்படவுள்ள ஆவின் பால் விற்பனை மையங்கள் வருமாறு: அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசண்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர். மக்களின் தேவையை பூர்த்தி செய்ய எதுவாக முதற்கட்டமாக இந்த 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications