Flashback: நல்லகண்ணுவை தோற்கடித்த சிபி ராதாகிருஷ்ணன் + திமுக கூட்டணி.. எதிரும் புதிரும் இணைந்த களம்!
நல்லகண்ணு எந்தத் தேர்தலிலும் வென்றதில்லை என்ற வரலாற்றுக்கு காரணமாக அமைந்தது 1999 நாடாளுமன்றத் தேர்தல்.
சென்னை : ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவை தோல்வியுறச் செய்தவர்.
மகாராஷ்டிரா உட்பட நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அத்துடன் இவர் 2016 முதல் 2019 வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்துள்ளார்.

ஆர்.நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர்.நல்லகண்ணு, அரசியல் பேதமற்று அனைத்துக் கட்சியினராலும் கொண்டாடப்படுபவர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட, தான் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்த பிறகு நல்லகண்ணுவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அந்தளவுக்கு எதிர் முனை சித்தாந்தம் கொண்டவர்களாலும் மதிக்கத்தக்க தலைவராக இருப்பவர் ஆர்.நல்லகண்ணு. அப்படிப்பட்ட நல்லகண்ணு, இதுவரை தேர்தல்களில் வென்றதில்லை.

நல்லகண்ணுவை தோற்கடித்த சிபிஆர்
1999 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் சிபிஐ சார்பில் நல்லகண்ணு போட்டியிட்டார். அவரை எதிர்த்து நின்ற பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன், 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஊரறிந்த தலைவரான நல்லகண்ணு, தமிழ்நாட்டில் அப்போது வரை பெரிதாக கால் பதிக்காத பாஜகவின் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இத்தனைக்கும், கோவை மில் தொழிலாளர்கள் அதிகம் உள்ள, இடதுசாரிகள் செல்வாக்கு மிக்க தொகுதி.

ஆட்சியைக் கவிழ்த்த ஜெ.
1998ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்று அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது பாஜக. சில மாதங்களிலேயே பாஜகவுடன் உரசல் ஏற்பட்டதால் ஜெயலலிதா, பாஜக அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி, ஆட்சியைக் கவிழ்த்தார். ஜெயலலிதா 13 மாதத்தில் பாஜகவின் ஆட்சியைக் கவிழ்த்தது பாஜகவுக்கு மக்கள் மத்தியில் அனுதாப அலையை ஏற்படுத்தி மீண்டும் பலத்தோடு ஆட்சிக்கு வர காரணமானது.

திமுக + பாஜக கூட்டணி
பாஜக ஆட்சி கவிழ்ந்ததால் 1999ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இந்துத்வா கொள்கை கொண்ட பாஜகவும், திராவிடக் கொள்கைகளோடு பகுத்தறிவு பேசும் திமுகவும் கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணியில் பாமக, மதிமுகவும் இணைந்தன. அதிமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஐஎம் ஆகிய இடதுசாரி கட்சிகள் சேர்ந்தன. திமுக கூட்டணியில் பாஜக சார்பில் கோவையில் மீண்டும் போட்டியிட்டார் சிபி ராதாகிருஷ்ணன். அதிமுக கூட்டணியில் சிபிஐ சார்பில் கோவையில் களமிறங்கினார் ஆர்.நல்லகண்ணு.

தோற்ற நல்லகண்ணு
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பாஜகவுக்கு ஆதரவான அலையை கோவையில் உருவாக்கி வைத்திருந்தது. மத உணர்வு சார்ந்த கொதிநிலை இருந்து வந்த சூழலில் 'அமைதியான கோவை' என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்தித்தார் நல்லகண்ணு. கோவை தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி என்றாலும், நல்லகண்ணு நேர்மையான அரசியல்வாதி என மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தாலும், சிபி ராதாகிருஷ்ணனிடம் தோல்வியைச் சந்தித்தார்.

தோல்விக்குக் காரணம்
பாஜக வேட்பாளர் சிபிஆர் தோற்று நல்லகண்ணு ஜெயித்தால் கோவையில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கும் என பாஜக மேற்கொண்ட பிரச்சாரங்களும், கூட்டணியில் திமுக இருந்ததால் கிடைத்த ஆதரவும் சேர்ந்து சிபி ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்தது. 1967 மற்றும் 1977 சட்டமன்றத் தேர்தல்ககளில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றவர் நல்லகண்ணு. நல்லகண்ணு போட்டியிட்ட எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றது இல்லை என்ற வரலாற்றுக்கு காரணமாக அமைந்துவிட்டது இந்த கோவை தோல்வி. நல்லகண்ணுவின் தோல்வியால் என்றும் நினைவுகூரப்படும் கோவை தொகுதி 1999 லோக்சபா தேர்தலில் வென்ற சி.பி.ராதாகிருஷ்ணன் இப்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications