ஆண்டவன் வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாதுனு சொல்லிட்டு! ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்திய ரஜினி
சென்னை: ஆண்டவன் வந்தாலும் தமிழகத்தை காக்க முடியாது என்று சொல்லிவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு ரஜினி , அவருடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளது பேசும் பொருளாகியுள்ளது.
ரஜினிகாந்த் எந்த நேரத்தில் எதை செய்வார் என அவரை சுற்றி இருப்பவர்களால் கூட யூகிக்க முடியாது என்றே சொல்வார்கள். அந்த வகையில் இன்றைய தினம் ஜெயலலிதா பிறந்தநாளில் ஒரு சம்பவம் நடந்தது.

அதாவது ஜெயலலிதாவின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நடந்து வரும் நிலையில் போயஸ் தோட்டத்தில் வேதா இல்லத்தில் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அப்போது திடீரென வேதா இல்லத்திற்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். இதையறிந்த தீபாவும் மாதவனும் வாசல் வரை சென்று அழைத்து வந்தனர். பிறகு அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கருப்பு வெள்ளை படத்திற்கு ரஜினி மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவருடைய நினைவுகள் அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும். அந்த இனிப்பான, சுவையான நினைவுகளுடன் போய்க் கொண்டிருக்கிறேன். ஜெயலலிதாவை இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளேன். இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வீட்டிற்கு திடீரென ரஜினிகாந்த் சென்று அஞ்சலி செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1996ஆம் ஆண்டு அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என கூறியிருந்த ரஜினியா, இன்று அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் என்ற கேள்வி எழுகிறது.
1995 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ரஜினி பேசியபோது தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக கூறியிருந்தார். அதாவது அப்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். அப்படிப்பட்ட நிலையில் ரஜினியை ஆர்.எம்.வீரப்பன் துளி கூட கண்டிக்காததால் கோபமடைந்த ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.
இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் - ஜெயலலிதா இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. அப்போது ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டம் வீடு அருகே ரஜினி காரில் தனது வீட்டுக்கு வரும் போது அவரது கார் சோதனைக்குள்படுத்துவது உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அது போல் முத்து திரைப்படத்திலும் அவர் பேசிய வசனமான நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன் என்ற வசனம் அரசியல வருகைக்கான சிக்னலாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என பலர் காத்திருந்த 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் வந்தது. அப்போது திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அதே சமயம் அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என அவர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அப்போது ரஜினியின் வாய்ஸ் எடுப்பட்டு திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அப்போது முதலே ரஜினி அவருடன் சமரசப் போக்கை கையாண்டார். அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் கூட தைரியலட்சுமி என பாராட்டினார்.
பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றுவிட்டு போயஸ் தோட்டத்திற்கு திரும்பியதும் ரஜினி, ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications