சென்னை டூ மதுரை.. டிக்கெட் கட்டணம் வெறும் ரூ.14,237 மட்டுமே.. விமான பயணிகள் தவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்திருப்பது நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 கட்டணமாக இருந்த நிலையில், இன்று ரூ.17,527 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நாளை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக 234 தொகுதிகளில் திமுக, அதிமுக, நாதக, தவெக, பாமக ராமதாஸ், சசிகலா தரப்பு மற்றும் சுயேட்சைகள் உட்பட 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற அத்தனை கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டன.

நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்துவிட்ட சூழலில், நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடி பேராக உள்ளது. அதில் 2.80 கோடி ஆண்களும், 2.93 கோடி பெண்களும், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவர். SIR பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இதனால் நாளை வாக்குப் பதிவு சுமார் 85% கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர் புறப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் இருந்து 1.88 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் தனியார் பேருந்துகளில் கட்டணம் உச்சத்தில் இருக்கிறது. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கே ரூ.1,799 கட்டணமாக இருக்கிறது.
இதற்கு விமானத்திலேயே சென்றுவிடலாம் போல என்பதே நடுத்தர மக்களின் பேச்சாக உள்ளது. ஆனால் விமான கட்டணங்கள் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.5,354ஆக இருக்கும். ஆனால் இன்று ரூ.17,527ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை - மதுரை செல்ல ரூ.13,320 மற்றும் சென்னை டூ திருச்சி செல்ல ரூ.14,237ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,319ஆக கட்டணம் இருந்து வந்த நிலையில், இன்று ரூ.12,027ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications