கால்பந்து வீராங்கனை மரணம்.. "இதெல்லாம் அநீதி.." எடப்பாடி கண்டனம்..ரூ1 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை
சென்னை: சென்னையில் மாணவி பிரியாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மாணவி பிரியா (வயது 17). சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பிரியா கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.
தேசிய அளவிலான போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளார். கல்லூரியிலும் இவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

மாணவி பிரியாவுக்கு அறுவை சிகிச்சை
இந்த நிலையில், காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனால், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு காலில் சவ்வு விலகியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு மாணவி பிரியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

கால் அழுகியது
எனினும் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக பிரியா சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு காலில் செய்யப்பட்ட சோதனையில், கால் அழுகியது கண்டுபிடிக்கப்பட்டது. சவ்வில் இருந்து திசுக்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளன. இதனால் காலை உடனே அகற்ற வேண்டும். இல்லையென்றால் மற்ற பாகங்களுக்கு பாதிப்பு பரவும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இளம் கால்பந்து வீராங்கனை பலி
இதையடுத்து பிரியாவின் கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில், கால் அகற்றப்பட்ட மாணவி பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது அவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக கால்பந்து வீராங்கனை குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

அநீதிக்கு பொறுப்பேற்று
இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். கால்பந்து வீராங்கணை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு
முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "இரு மருத்துவர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். இன்று மருத்துவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். இதேபோல் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications