100க்கு 100% தேர்ச்சி.. அடிச்சுத் தூக்கிய அரசு பள்ளிகள்! மாணவர்களை விட மாணவியர்கள் தான் பெஸ்ட்!
சென்னை: தமிழகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்தாண்டு மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.51 சதவீதம் அதிகரித்துள்ளது. முக்கியமாக, 5,171 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. மேலும் 8,233 பள்ளிகள் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் 1,931 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்றன. தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளனர்.

மொத்தமாக தேர்வு எழுதிய 8,70,643 பேரில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவியர்கள் மீண்டும் சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 4,35,247 மாணவியர்களில் 4,19,891 பேர் தேர்ச்சி பெற்று 96.47 சதவீத தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், 4,35,396 மாணவர்களில் 4,01,214 பேர் தேர்ச்சி பெற்று 92.15 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் மாணவர்களை விட மாணவியர்கள் 4.32 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டு தேர்வில் 11,174 பேர் வருகை புரியவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 93.80 சதவீதம் தேர்ச்சி விகிதம் இருந்த நிலையில், இந்தாண்டு அது 94.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்தாண்டு 12,467 பள்ளிகள் தேர்வில் பங்கேற்றுள்ளன. இதில் 7,490 மேல்நிலைப்பள்ளிகளும், 4,977 உயர்நிலைப்பள்ளிகளும் அடங்கும்.
முக்கியமாக, 5,171 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. மேலும் 8,233 பள்ளிகள் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு கணிசமான முன்னேற்றம் பதிவாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 1,931 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. மேலும் 3,463 அரசு பள்ளிகள் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
பள்ளி வகைப்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, அரசுப் பள்ளிகள் 91.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
இருபாலர் பள்ளிகள் 94.42 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பெண்கள் பள்ளிகள் 96.42 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கின்றன. ஆண்கள் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.50 சதவீதமாக உள்ளது.
இதன்மூலம் பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 7.92 சதவீதம் அதிக தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதேபோல் இருபாலர் பள்ளிகளும் ஆண்கள் பள்ளிகளை விட 5.92 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்தாண்டும் மாணவியர்கள் தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித உயர்வும் பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications