நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்! வீடியோவில் இருந்த லார் கிப்பான் குரங்கு எங்கே?
சென்னை: சென்னையில் அரியவகை லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் 3 தினங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மீறும் பட்சத்தில் வனத்துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையில் விக்ரம் வீட்டிற்கு சென்ற வனத்துறையினர் சீலிடப்பட்ட கவரில் வைக்கப்பட்ட நோட்டீஸை அளித்தனர். அந்த நோட்டீஸில், மூன்று தினங்களுக்குள் கிப்பார் குரங்கு குறித்த தகவல்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கிப்பார் குரங்கு குறித்து இதுவரை எந்த ஆவணங்களையும் வனத்துறையிடம் தாக்கல் செய்யாதது ஏன், இந்தோனேஷியாவில் கடத்தப்பட்ட கிப்பான் குரங்கு விக்ரமுக்கு கிடைத்தது எப்படி போன்ற கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. ஒரு வேளை 3 நாட்களுக்குள் கிப்பான் குரங்கு குறித்த விவரங்களை தெரிவிக்காவிட்டால் விக்ரம் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் தனது 63 ஆவது திரைப்பட்தில் நடித்து வருகிறார். அண்மையில் ஒரு குரங்குடன் விளையாடும் வீடியோவை விக்ரம் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குரங்கிடம் பேசிக் கொண்டே அதை போல் முகப்பாவனைகளை மாற்றும் வகையில் அந்த வீடியோ அமைந்திருந்தது.
இந்த வீடியோவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த குரங்கு அரிய வகையானது என சொல்லப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட லார் கிப்பான் என்பது இந்த குரங்கின் பெயர் ஆகும்.
இது தற்போது அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினம் ஆகும். இந்த பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கை வளர்ப்பது சட்டவிரோதம். அதற்கான உரிய அனுமதியை காவல் துறையிடம் பெற்று அந்த ஆவணங்களுடன் வளர்க்கலாம்.
அப்படியிருக்கும் போது சியான் விக்ரம் அந்த குரங்குடன் இருக்கும் வீடியோ வெளியானதால், அவர் அந்த குரங்கை வளர்க்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரம் சம்பந்தியின் பண்ணை வீட்டில் வளர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
குரங்கு குறித்து சர்ச்சை எழுந்ததும் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நடிகர் விக்ரம் நீக்கியுள்ளார். குரங்கு குறித்த வீடியோ வைரலான நிலையில் வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அந்த குரங்கு ஈரோட்டில் உள்ள நபர் விக்ரமின் மகள் வீட்டிற்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. அங்கு விடுமுறைக்கு சென்ற விக்ரம், அந்த குரங்குடன் விளையாடி வீடியோ போட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள விக்ரமின் வீட்டிற்கு சென்ற வனத்துறையினர், அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். வீடியோவில் இருந்த அந்த குரங்கு தற்போது எங்கிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வகை குரங்குகள் குறித்து தகவல்களை பார்க்கலாம். மணிப்பூரைச் சேர்ந்த லைக்ராம் சிங் என்பவர் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 கிப்பான் குரங்குகள் தன்னிடம் இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மத்தி அரசின் பரிவேஷ் எனும் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் இருந்து 3 கிப்பான்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு தத்தெடுப்பு முறையில் கொடுக்கப்பட்டதாம். அதில் ஒன்று இறந்துவிட்ட நிலையில் மற்ற இரு குரங்குகள் உயிருடன் இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் இருந்து 2 கிப்பான்கள் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் என்பவருக்கு (இவரது மகனைத்தான் விக்ரம் மகள் திருமணம் செய்துள்ளார்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விற்பனைகளுக்கு வனத்துறையின் அனுமதி ஏதும் இல்லை என சொல்லப்படுகிறது.
வடமாநிலங்களின் எல்லையில் இந்த வெளிநாட்டு அபூர்வ வனவிலங்குகள் இந்தியாவிற்குள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வனத்துறையினரும் இதை ஆராய்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
