பாஜகவின் தலைவர் ஓபிஎஸ்..பொதுச் செயலாளர் டிடிவி.! அப்போ அண்ணாமலை அம்போ தான்.. ஜெயக்குமார் ஒரே போடு..!
சென்னை: தேர்தல் முடியட்டும் பாஜகவின் தலைவராக ஓபிஎஸ் இருப்பார். அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் இருப்பார். ஆனால், அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என அதிமுக அழிந்து விடும், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் வரும் என கூறிய அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர் தீவிர பிரச்சாரத்தோடு எதிர்க் கட்சி தலைவர்கள் மீது தங்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பேசிய அண்ணாமலை, அதிமுக குறித்தும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். இதன் காரணமாக பாஜக- அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அண்ணாமலை: தேனியில் பேசிய அண்ணாமலை," தேனியில் டிடிவி.தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் என அனைத்து இடங்களிலும் கூட்டணியின் மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சியில் இருந்து வேறு யாரவது ஒருவரை நிறுத்தியிருக்கலாம். ஏன், அவரே களத்தில் இறங்கியுள்ளார் என்றால், மோடி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும், தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான்.
டிடிவி தினகரன்: அதிமுக தொண்டர்கள் வாக்கும் டிடிவி.தினகரனுக்கு தான். அதிமுக தொண்டர்கள் அமமுகவுடன் இணைய போகிறார்கள். அவர்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவன் யார் என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும். பூச்சாண்டிகளையும், போலித் தலைவர்களையும் எந்த தொண்டனும் கண்டுபிடித்து விடுவான்.. ஜூன் 4ம் தேதி டிடிவி.தினகரன் வெற்றிபெற்ற பிறகு உண்மையான மக்களை சார்ந்த அரசியல் நடக்கும். தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என பேசியிருந்தார்.
ஜெயக்குமார்: இந்நிலையில் அதிமுக அழிந்து விடும், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் வரும் என கூறிய அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்," எங்கு பார்த்தாலும் மக்கள் அதிமுகவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சிறப்பான அடிப்படை வசதி பெற்றிருந்தது. மேலும் நல்ல கட்டமைப்போடு அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் அப்படியல்ல. தஞ்சாவூரில் பாடசாலை நடத்தி வரும் பிராமணரை திமுகவினர் தாக்கி இருக்கின்றனர். இதற்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
பாஜக தலைவர் ஓபிஎஸ்: இபிஎஸ் தலைமையிலான அதிமுக, மக்களவை தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். தேர்தல் முடியட்டும் பாஜகவின் தலைவராக ஓபிஎஸ் இருப்பார். அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் இருப்பார். ஆனால், அண்ணாமலை காணாமல் போய்விடுவார். ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-க்கு செல்வாக்கு கிடையாது. அவரது ஓட்டு அதிமுகவுக்குதான் கிடைக்கும்." என கூறினார்.












Click it and Unblock the Notifications