அப்போ அண்ணாமலை பேசுனது? அதிமுக - பாஜக கூட்டணி பற்றி நத்தம் விஸ்வநாதன் சொன்ன வார்த்தை!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார். அண்ணாமலையின் முந்தைய விமர்சனம் பற்றிய கேள்விக்கு கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும் யாருடனும் கூட்டணி அமைக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த திடீர் மீட்டிங் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தை முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், "கடந்த காலங்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே" என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நத்தம் விஸ்வநாதன், "தலைமை எந்தக் கூட்டணி அமைத்தாலும் மகிழ்ச்சிதான். கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது" என்று தெரிவித்தார்.
அதேசமயம், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அ.தி.மு.கவை பொறுத்தவரை தி.மு.கவை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பேச்சு குறித்து மழுப்பலாக பதில் சொன்ன அதேசமயம், பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார் நத்தம் விஸ்வநாதன்.












Click it and Unblock the Notifications